சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், கனராஜின் மனைவி, மைத்துனர், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலா, முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி உட்பட 316 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. மீண்டும் குற்றவாளிகள் மற்றும் பல்வேறு சாட்சிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஏடிஎஸ்பிக்கள் வீரபெருமாள், பெருமாள் சாமி ஆகியோரிடம் கடந்த வாரம் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடந்தது. அவர்கள் அளித்த தகவலின்படி பலரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். இந்நிலையில், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு கோவை சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில், நாளை (வியாழக்கிழமை) கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் கூறும்போது, ‘‘கடந்த 2022க்கு முன்னர் இந்த வழக்கை தனிப்படை போலீசார் கையாண்டு வந்தனர். அப்போது யாரிடம் எல்லாம் விசாரிக்க வேண்டி உள்ளது என பட்டியல் தயாரித்து அவர்களிடம் விசாரிக்க அனுமதி கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். கோர்ட் அனுமதி அளித்ததின் பேரிலேயே, தற்போது ஜெயலலிதாவின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள், ஜெயலலிதா வளர்ப்பு மகன் சுதாகரன் என ஒவ்வொருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட்டு வருகிறது.
சுதாகரனிடம் சிபிசிஐடி விசாரிப்பது இதுவே முதல் முறை’’ என்றனர். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ளது. ஜெயலலிதா பிரமாண்டமாக திருமணம் செய்து வைத்த வளர்ப்பு மகனிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்களிடமும் விசாரணை நடத்தவும் சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். இது அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே பீதியை கிளப்பியுள்ளது.
The post தீவிரமடையும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜெயலலிதா வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சிபிசிஐடி சம்மன்: நாளை ஆஜராக உத்தரவு appeared first on Dinakaran.