நகராட்சிகளுடன் இணைகின்ற ஊராட்சிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியை தருவது யார்? பேரவையில் திமுக- அதிமுக காரசார விவாதம்

சென்னை: நகராட்சிகளுடன் இணைகின்ற ஊராட்சிகளில் தற்போது செயல்படுத்தப்படும் 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியை யார் தருவது என்று திமுக- அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. ஒன்றிய அரசு தராவிட்டால் மாநில அரசே ஏற்கும் என அமைச்சர் கே.என்.நேரு கூறினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு திருப்பரங்குன்றம் ராஜன் செல்லப்பா (அதிமுக) பேசியதாவது:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் இருக்கிற 21 மாநகராட்சிகளில் 19 மாநகராட்சியில் கூடுதலாக ஊராட்சிகளை சேர்க்கவிருப்பதாக அறிவிப்பு வந்திருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், 9 நகராட்சிகளில் கூடுதல் ஊராட்சிகளை சேர்ப்பதாக அறிவிப்பு வந்திருக்கிறது. இணைக்கின்ற ஊராட்சிகளுக்கு ஒன்றிய அரசு நிதியினை கொடுக்காவிட்டால், அதற்கான நிதியை மாநில அரசே ஏற்றுக்கொள்ளும் என்ற உறுதியினை அமைச்சர் அளிப்பாரா என்பதை அறிய விரும்புகிறேன்.

தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம், அனைத்து கடலோர மாவட்டங்களிலும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வரப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தீர்கள்? அமைச்சர் கே.என்.நேரு: 100 நாள் வேலைத் திட்டம், நகராட்சியில் எடுக்கின்ற பகுதிகளுக்கு ஒன்றிய அரசு நிதி தராது. எங்களுடைய மாநில அரசின் நிதியிலிருந்து தான் அதை தரப்போகிறோம். கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஏன் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இப்போது நிறுத்தப்பட்டிருக்கிறது என்று கேட்டார்.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில், ஒரு ஆயிரம் லிட்டரை உற்பத்திச் செய்வதற்கு 52 ரூபாய்க்கு மேல் செலவாகிறது. இயற்கையாக, காவிரியை நீர் ஆதாரமாகக் கொண்டு, அந்தப் பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கி அந்தப் பணி முடிவடையும் நிலையில் இருக்கிறது. மரக்காணம் பகுதியிலே புதிய ஏரியை உருவாக்க இருக்கிறோம். எனவே தான், அந்தத் திட்டம் வரவில்லை. சென்னையை சுற்றி இத்திட்டம் இருக்கிறது.

தூய்மைப் பணியாளர்களை நிரந்தரப்படுத்துவோம் என்று என்றைக்குமே நாங்கள் சொன்னது இல்லை. ஏனென்றால், தூய்மைப் பணியாளர்கள் அனைவருமே அவுட் சோர்சிங் முறையிலே எடுத்து வேலை செய்கிறவர்கள். கிட்டத்தட்டட 40ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருக்கிறார்கள். இந்த அரசு உங்களை வேலையை விட்டு நீக்காது என்ற உறுதியை அவர்களுக்கு தந்திருக்கிறோம். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

The post நகராட்சிகளுடன் இணைகின்ற ஊராட்சிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியை தருவது யார்? பேரவையில் திமுக- அதிமுக காரசார விவாதம் appeared first on Dinakaran.

Related Stories: