நெல்லையில் முன்னாள் எஸ்ஐ கொலை தேசிய மனித உரிமை ஆணையம் டிஜிபி, கலெக்டருக்கு நோட்டீஸ்: 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

நெல்லை: முன்னாள் எஸ்ஐ ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நெல்லை கலெக்டர், தமிழ்நாடு டிஜிபிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள தேசிய மனித உரிமை ஆணையம், 4 வாரங்களுக்குள் முழு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.  நெல்லை டவுன் தொட்டி பாலம் தெருவை சேர்ந்த முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி (60) கடந்த 18ம் தேதி அதிகாலை படுகொலை செய்யப்பட்டார். இதில் முக்கிய குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தி என்கிற தவுபிக் சுட்டு பிடிக்கப்பட்டார்.

அவரது சகோதரர் கார்த்திக் மற்றும் மனைவியின் சகோதரர் அக்பர்ஷா ஆகியோர் நெல்லை கோர்ட்டில் சரண் அடைந்தனர். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த 17 வயது சிறுவன் மற்றும் மனைவியின் மற்றொரு சகோதரர் பீர் முகம்மது ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் ஜாகீர்உசேன் அளித்த புகாரை முறையாக விசாரிக்காத, டவுன் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், அப்போதைய உதவி கமிஷனர் செந்தில்குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தவுபிக்கின் மனைவி நூருநிஷாவை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். ஜாகீர் உசேன் பிஜிலி, வக்பு இடம் தொடர்பாக தனக்கு மிரட்டல் இருப்பதாக போலீசாரிடம் ஏற்கெனவே புகார் தெரிவித்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. போலீசாரின் அலட்சியமே ஜாகீர் உசேன் கொலைக்கு காரணம் என குடும்பத்தினர் புகார் கூறியதை சாராம்சமாக கொண்டு, இந்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு டிஜிபி, நெல்லை கலெக்டர் 4 வாரங்களுக்குள் முழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

The post நெல்லையில் முன்னாள் எஸ்ஐ கொலை தேசிய மனித உரிமை ஆணையம் டிஜிபி, கலெக்டருக்கு நோட்டீஸ்: 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: