பெங்களூரு: கடந்த 2016ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி என்ற கன்னட சினிமாவின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இப்படத்தில் ரஷித் ஷெட்டியுடன் ஜோடியாக அவர் நடித்திருந்தார். இப்படத்தில் நடிக்கும் போது ரஷித் ஷெட்டி ராஷ்மிகா காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூட தகவல் வெளியானது. இதையடுத்து தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற ராஷ்மிகா அங்கு முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதன் பிறகு அவரே திருமணத்தை நிறுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் கன்னடத்தையும், கர்நாடகாவையும் அவமதிப்பதாகவும் அவருக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றும் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ரவிக்குமார் கவுடா கனிகா பேசியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ‘கன்னட மொழி படத்தின் மூலம் திரையுலகில் வாழ்க்கையை தொடங்கியவர் நடிகை ராஷ்மிகா. ஆனால் அவர் தற்போது கன்னடத்தை புறக்கணிக்கிறார். கடந்த ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க ஒரு பேரவை உறுப்பினர் 10 முதல் 12 முறை அழைப்பு விடுத்திருப்பார். ஆனால் ‘கர்நாடகா எங்கே இருக்கிறது என தெரியாது’ என சொல்லி புறக்கணித்தார். கன்னடத்தை புறக்கணித்த நடிகை ராஷ்மிகாவுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டாமா?’ என்று ஆவேசமாக தெரிவித்தார்.
The post கர்நாடகா எங்கே இருக்கிறது என்பதா? நடிகை ராஷ்மிகாவுக்கு காங். எம்எல்ஏ கண்டனம் appeared first on Dinakaran.