எப்ப பார்த்தாலும் சீனியர்…சீனியருங்குற…நான் 1989லேயே எம்எல்ஏ நீங்க 2001ல்தான் எம்எல்ஏ: தேனியில் ஓபிஎஸ்சுக்கு எடப்பாடி பதிலடி

தேனி: சேவல் சின்னத்தில் போட்டியிட்டு நான் 1989ல் எம்எல்ஏ ஆனேன். 2001ல் தான் முதன்முதலாக எம்எல்ஏவாக வந்த ஓ.பன்னீர்செல்வம், என்னை பார்த்து யார் சீனியர் என்கிறார்’ என்று எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். தேனி அருகே பெரியகுளம் செல்லும் சாலையில் மதுராபுரியில் அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நேற்று மாலை நடந்தது. சட்டமன்ற எதிர்கட்சித் துணைத்தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார்.

முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், ராஜன்செல்லப்பா எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தேனி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர்கள் முருக்கோடை ராமர், எஸ்டிகே.ஜக்கையன் வரவேற்று பேசினர். கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

மொழிக்கொள்கையை பொறுத்தவரை அதிமுக தெளிவாக உள்ளது. இருமொழிக்கொள்கை என்பதில் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் பிஜேபியை பார்த்து நடுங்கவில்லை. அதிமுகவை பொறுத்தவரை வேண்டும் என்றால் வேண்டும். வேண்டாமென்றால் வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி மூழ்கும் கப்பல் என இந்த பகுதியை சேர்ந்தவர் கூறியிருக்கிறார். ஜெயலலிதா துரதிர்ஷ்டவசமாக இறந்த காலத்தில், முதல்வர் பதவி கிடைக்காததால் தர்மயுத்தம் நடத்தியது யார்? தனக்கு பதவி இல்லையென்றால் எந்த நிலைக்கும் பன்னீர்செல்வம் செல்வார்.

எம்எல்ஏக்களின் ஆதரவோடு முதல்வராக நான் தேர்வு செய்யப்பட்டபோது, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நேரத்தில் ஜெயலலிதா பகல், இரவு என பாராமல் உழைத்து கொண்டு வந்த அதிமுக ஆட்சியை அகற்ற, ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய திமுகவோடு சேர்ந்து வாக்களித்தவர்தான் பன்னீர்செல்வம். இரட்டை இலை சின்னத்தை முடக்க தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தவர்தான் பன்னீர்செல்வம். தொண்டர்களுக்கான சொத்தாக எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கி வைத்த அதிமுக கோயிலான தலைமைக்கழக அலுவலகத்தை ரவுடிகளை கூட்டி வந்து அடித்து உடைத்தவர்தான் பன்னீர்செல்வம். அந்த அலுவலகத்திற்கு சீல் வைக்க செய்தவர்தான் பன்னீர்செல்வம்.

எங்களை விட்டுப் போகவேண்டாம் என்று எவ்வளவோ கெஞ்சியும் அவர் கேட்கவில்லை. அவராகத்தான் போனார். எங்கள் மீது பழி சுமத்தி பிரயோஜனமில்லை. எப்ப பார்த்தாலும் சீனியர்…சீனியருங்குற… 1989ல் ஜெயலலிதா சேவல் சின்னத்தில் போடியில் போட்டியிட்டார். அப்போது நானும் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனேன். 1991லும் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

1998ல் ஜெயலலிதாவே எனக்கு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியதில் வெற்றி பெற்று எம்பியாகவும் இருந்தேன். 2001ல் தான் முதன்முதலாக எம்எல்ஏவாக வந்த ஓ.பன்னீர்செல்வம், 1989, 1991, 1998 தேர்தல்களில் எம்எல்ஏ, எம்.பி என பல பதவிகளை வகித்த என்னை பார்த்து யார் சீனியர் என்கிறார். கட்சிக்கு துரோகம் செய்ததால் அவர் எங்கே நிற்கிறார் என நீங்கள் அறிவீர்கள். அதிமுகவை மூழ்கும் கப்பல் என்கிறார். இது கரைசேரும் கப்பல். இந்த கப்பலில் ஏறுபவர்கள் கரையேறி பிழைத்துக்கொள்வார்கள். நம்பாதவர்கள் கடலில் மூழ்கித்தான் போக வேண்டும்.இவ்வாறு பேசினார்.

The post எப்ப பார்த்தாலும் சீனியர்…சீனியருங்குற…நான் 1989லேயே எம்எல்ஏ நீங்க 2001ல்தான் எம்எல்ஏ: தேனியில் ஓபிஎஸ்சுக்கு எடப்பாடி பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: