பல ஆண்டுகளாக வேலை செய்தும் மாவட்ட செயலாளர் பதவி தர மறுப்பு பனையூர் தவெக அலுவலகம் முன் விஜய் காரை மறித்த பெண் நிர்வாகி: சாகும்வரை போராட்டம் தொடரும் என முற்றுகை; பின்வாசல் வழியாக தப்பிய புஸ்ஸி

சென்னை: பல ஆண்டுகளாக வேலை செய்தும் மாவட்ட செயலாளர் பதவி தர மறுத்ததால் சென்னை பனையூர் தவெக அலுவலகத்தில் பெண் ஒருவர் கதறி அழுதார். அப்போது ஆதரவாளர்களுடன் விஜய்யின் காரை மறித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் தொடர்ந்ததால் புஸ்ஸி ஆனந்த் பின்வாசல் வழியாக வெளியேறினார். நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகத்தை தொடங்குவதற்கு முன்பு தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக நடத்தி வந்தார். அப்போதிருந்தே அஜிதா ஆக்னல் என்ற பெண் அதில் செயல்பட்டு வந்தார். நடிகர் விஜய் 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்சி தொடங்கினார்.

இதை தொடர்ந்து அஜிதா ஆக்னல் தவெகவில் தீவிரமாக பணியாற்றத் தொடங்கினார். கட்சித் தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தனது ஆதரவாளர்களை திரட்டி மாலையணிவித்து மரியாதை செலுத்துவது, நலத்திட்ட உதவிகளை வழங்குவது உள்ளிட்ட கட்சிப் பணிகளில் ஆர்வத்துடன் செயலாற்றி வருகிறார். இதனால் மாவட்ட செயலாளர் பதவி தனக்கு கிடைக்கும் என எண்ணியிருந்தார். ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பான்மையாக நாடார் சமூகத்தினர் இருப்பதால், அந்த சமூகத்தை சேர்ந்தவர்களையே கட்சி மாவட்ட செயலாளராக நியமிக்க வேண்டும் என்று தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விஜய்க்கு யோசனை கூறியுள்ளார்.

இதனால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு தவெகவிற்கு செயலாளராக யாரையும் நியமிக்க முடியாத சூழ்நிலை நிலவி வந்தது. இதற்கிடையே நாடார் சமூகத்தைச் சேர்ந்த எஸ்சிஆர் சாமுவேல்ராஜ், ஜேகேஆர் உள்ளிட்ட பிரபலங்கள் தவெகவின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு வர விரும்பினர். அவர்களும் தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள்களில் தவெக சார்பில் மாலையணிவிப்பு, அன்னதானம் என நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதனால் ஒரு தேர்தலை சந்திப்பதற்கு முன்பே தவெகவில் கடும் கோஷ்டி பூசல் நிலவுகிறது.

இந்த நிலையில் விடுபட்ட 8 மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்களுக்கு நேற்று பொறுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று, பொறுப்பு நியமன ஆணைகளை வழங்குவதாக இருந்தது. இதில், தூத்துக்குடிக்கு மத்திய மாவட்டச் செயலாளராக எஸ்டிஆர் சாமுவேல் ராஜ், இணை செயலாளர் கோல்டன், பொருளாளர் சிவக்குமார், இணை செயலாளர் விஜி, துணை செயலாளர் மரிய கராசியா பெர்லின்சியா மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட உள்ளது அஜிதா ஆக்னலுக்கு தெரியவந்தது. தனக்கு மாவட்ட செயலாளர் பதவி தரப்படாதது மட்டுமல்லாமல், செயற்குழு உறுப்பினர் பதவி கூட வழங்காததை அறிந்து அஜிதாவும் அவரது ஆதரவாளர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதை தொடர்ந்து அஜிதா தனது ஆதரவாளர்களுடன் நேற்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு சென்று கட்சி தலைவர் விஜய்யை சந்தித்து முறையிட வந்தார். அவர்களை பவுன்சர்கள் தடுத்து நிறுத்தியதால் கட்சி அலுவலகம் முன்பு காலையில் இருந்தே காத்துக்கொண்டிருந்தனர். அப்போது நிர்வாகிகளுக்கு பொறுப்புகளை வழங்க விஜய் கட்சி அலுவலகத்துக்கு வந்தார். உடனே அஜிதாவும் அவரது ஆதரவாளர்களும் விஜய்யிடம் முறையிடுவதற்காக அவரது காரை வழிமறித்து தடுத்தனர். ஆனால் விஜய்யின் கார் அங்கு நிற்காமல், அவரை தடுத்து நிறுத்தியவர்கள் மீது மோதுவது போல் அதிவேகமாக வந்தது.

அதையும் மீறி அஜிதா காரை தடுத்து நிறுத்தினார். ஆனால் விஜய் முன் சீட்டில் அமர்ந்து அதை பார்த்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த அஜிதா, விஜயிடம் சைகை காட்டி பேசியபடி காரை மறித்தார். ஆனால் காரின் டிரைவர், பெண் என்றும் பாராமல் இடித்து தள்ளியபடி ஓட்டிச் சென்றார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து விஜய்யின் பனையூர் அலுவலகத்தை அஜிதா ஆக்னல் தனது ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார். இதனால் அவர்களுக்கும், பாதுகாப்பு பணியில் இருந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

செக்யூரிட்டிகள் தடுத்ததால், கட்சி அலுவலகம் முன்பு கதறி அழுதார். சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய நிர்மல் குமாரிடம் அஜிதா ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அஜிதாவின் ஆதரவாளர் வீடியோ ஒன்றை காண்பித்தார். அதில் லுங்கியுடன் ஒருவர் குத்தாட்டம் போட்டு கொண்டிருந்த காட்சி இடம் பெற்றிருந்தது. ‘இவரு ஒன்றிய செயலாளராம். எந்த அளவுக்கு பொறுப்பு கொடுத்திருக்காங்க..’ என்று ஆவேசத்துடன் தெரிவித்தனர். போராட்டம் காரணமாக அலுவலகத்தில் இருந்து பின்வாசல் வழியாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியேறினார். நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் அலுவலகத்திற்குள் வந்து பேச வருமாறு அழைத்தார். ஆனால் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக கூறி மறியலை தொடர்ந்தார் அஜிதா.

* பெண் நிர்வாகியின் இடுப்பில் கை வைத்து தள்ளிய பவுன்சர்
நடிகர் விஜய்யின் காரை பெண் நிர்வாகி அஜிதா மறித்தார். அப்போது விஜய் முன் சீட்டில் அமர்ந்திருந்தார். டிரைவரிடம் காரை நிறுத்த வேண்டாம், வேகமாக இயக்கும்படி கூறியதாக கூறப்படுகிறது. இதனால், காரை கைகளால் தடுத்தாலும், கார் வேகமாக முன்னேறியது. அப்போது அஜிதா, பின்னோக்கி நடந்தபடியே காரை தடுத்தபடியே நிறுத்த முயன்றார். அப்போது ஒரு பவுன்சர் வந்து அஜிதா இடுப்பில் கை வைத்து தள்ளினார். பெண் மறித்தால், காரை நிறுத்தி அவரிடம் விஜய் பேசியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு காரை மோதும்படி இயக்கியதும், பெண் நிர்வாகியை பவுன்சர் கை வைத்து தள்ளியும் விட்டுள்ளனர். இது, பெண்களை அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். ஏற்கனவே, நாமக்கல் மாவட்டத்தில் பெண் நிர்வாகியின் வீட்டுக்குள் புகுந்த மாவட்டச் செயலாளர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது மேலும் ஒரு பெண் நிர்வாகி மீது சென்னையில் காரை ஏற்றி தள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* ‘சொந்த ஊருக்கு போறோம்..’
நடிகர் விஜய் காரை மறித்த அஜிதா கூறும்போது, ‘‘பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்துள்ளேன். தற்போது பதவி எனக்கு வழங்கப்படவில்லை. இதனால் விஜய் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக முயன்றோம். அதன்பின்னர் நிர்மல்குமார் என்னை அழைத்துப் பேசினார். உங்களுடைய உழைப்பை வீண் செய்ய மாட்டோம். கண்டிப்பாக உங்களுக்கு உரிய பதவி தேடிவரும் என்று தெரிவித்தார். இதனால், நாங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் செல்கிறோம்’’ என்றார்.

Related Stories: