திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பேசா மடந்தையா நீங்கள் என விஜய்யை நடிகை கஸ்தூரி விளாசி உள்ளார். பாஜ ஆதரவாளரும், திரைப்பட நடிகையுமான கஸ்தூரி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து மலையடிவாரத்தில் உள்ள பழனி ஆண்டவர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை பனையூரில் இருக்கிறார் நண்பர் விஜய். அவர் அதை தாண்டி ஈரோட்டுக்கு சென்று இருக்கிறார். அவருக்கு திருப்பரங்குன்றம் விவகாரம் தெரியாது என்று சொல்ல முடியாது. கிறிஸ்துமஸ் விழாவில் பங்கெடுத்திருக்கிறார். கார்த்திகை தீபத்திற்கு ஒரு வாழ்த்து சொல்லி இருக்கலாம். அவரைப் பார்த்து சேரும் கூட்டம் எல்லாம் முருக நம்பிக்கை இருக்கக் கூடியவர்கள் தான். அனைத்து நம்பிக்கையும் உள்ளது என்று சொன்னால் தான் காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் உள்ளிட்ட படங்களை வைத்து அரசியல் செய்ய தகுதியானவர். இப்போது அவர், அவர்கள் பெயரை சொல்வதில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பெயர்களை சொல்லி அரசியல் செய்கிறார்.
இப்படி இருக்க வேண்டும் என்றால், அவர்களைப் போல கடவுளை நம்புபவரை நீங்கள் மதிக்க வேண்டும். திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக ஒரு உயிர் போய் இருக்கிறது. யாரும் இதுபோல் உயிரை மாய்த்து கொள்ளாதீர்கள் என்று ஒரு அறிக்கையாவது கொடுத்திருக்கலாம். தமிழகத்துக்கு முதல்வராக வேண்டும் என்ற கனவில் இருப்பவர், தமிழகத்தில் பற்றி எரியும் தீப பிரச்னையை பேசாதது மிகப்பெரிய தவறு. ஒருவேளை அவருக்கு எழுதிக் கொடுப்பவர்கள் இன்று லீவா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் அவர் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். கரூருக்கு அவர் வரவில்லை என்று நான் சொன்ன 2 நாளில் ஈரோட்டுக்கு வந்தார். அதேபோல திருப்பரங்குன்றம் விஷயத்தில் ஆமாம், இல்லை என்று சொல்லுங்கள். பேசா மடந்தையாக இருந்தால் உங்களுக்கு பேச விருப்பமில்லை என்று நினைப்பதா? பேச தெரியவில்லை என்று நினைப்பதா? இரண்டுமே மோசம்தான். இவ்வாறு கூறினார்.
