மதுரை: மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் புதிய வரைவு வாக்காளர் பட்டியல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் இரவு, மதுரை தெப்பக்குளத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது: எஸ்ஐஆர் எனும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 190 மீட்டர் ஓடி விட்டோம். மீதி 10 சதவீத பணிகளில் ஓடி விட்டால் வெற்றி நமக்குத்தான். நானும் பள்ளி, கல்லூரி காலங்களில் ஓட்டப்பந்தயம் ஓடியுள்ளேன். இப்போது ஓடச் சொல்லாதீர்கள். என்னை ‘ஓட்டி’ விடுவார்கள். அதிமுக – பாஜ தலைமையில் பல கட்சிகள் கூட்டணியில் சேர இருக்கிறது. எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் திமுக, அதிமுக இரு கட்சிகள் இடையேதான் போட்டி. சினிமா துவங்கி புதிதாக கட்சி தொடங்கியவர்கள் வரை எம்ஜிஆரை பற்றி பேசாதவர்களே கிடையாது. எல்லோரும் எம்ஜிஆர் புகழைத்தான் பாடுகிறார்கள். எஸ்ஐஆர் பணியின் மூலம் என் குடும்பத்தையே பிரித்து விட்டார்கள். என் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு இடத்தில் சீரியல் நம்பர் வந்துள்ளது. எங்கள் குடும்பம் ஒற்றுமையாக உள்ளது. பிரித்து விட வேண்டாம் என்று கலெக்டரிடம் தெரிவித்தேன். இவ்வாறு பேசினார்.
