சென்னை: இறந்து 4 ஆண்டுகள் ஆகியும் வாக்காளர் பட்டியலில் பாடலாசிரியர் புலமைப்பித்தன் பெயர் இடம்பெற்றுள்ளதாக வெளியான தகவல் எஸ்ஐஆர் நடவடிக்கைகள் மீது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள், அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் மீண்டும் செயல்படுத்தியது. இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அதில் 97,37,832 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இது மொத்த வாக்காளர்களில் சுமார் 15.18 சதவீதம் ஆகும். தேர்தல் ஆணையத்தின் விளக்கப்படி, நீக்கப்பட்டவர்களில் சுமார் 26.94 லட்சம் பேர் இறந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இத்தனை பெரிய அளவிலான நீக்கம் உண்மையிலேயே சரியானதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்த சூழலில்தான், 2021ம் ஆண்டு காலமான பாடலாசிரியர் புலமைப்பித்தன் பெயர் இன்னும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
புலமைப்பித்தன், அதிமுகவின் அவைத் தலைவராக இருந்தவர். சென்னை மயிலாப்பூர் தொகுதியில் வசித்து வந்த அவர், இலக்கியமும் அரசியலும் இணைந்த ஒரு முக்கிய ஆளுமையாக அறியப்பட்டவர். இப்படி ஒரு பிரபலத்தின் பெயரே நீக்கப்படாமல் தொடர்வது, சாதாரண மக்களின் பெயர்கள் எத்தனை தவறாக நீக்கப்பட்டிருக்கும் என்ற சந்தேகத்தை பலப்படுத்துகிறது. இதனால் எஸ்ஐஆர் நடவடிக்கையின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் மேலும் வலுப்பெற்றுள்ளதாக அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உயிருடன் இருக்கும் வாக்காளர்கள் நீக்கப்படுவதும், இறந்தவர்கள் பெயர் தொடர்வதும் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து என அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
2026 தேர்தலை நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்த வேண்டும் என்றால், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் ஏற்பட்டுள்ள தவறுகளை தேர்தல் ஆணையம் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாக தற்போது எழுந்துள்ளது. எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு அதிமுக பொதுச்செயலாளர் முழு ஆதரவு தெரிவித்து இருந்தார். தற்போது அவரது கட்சியை சேர்ந்த ஒருவர் மரணம் அடைந்த பிறகும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள நடவடிக்கைக்கு என்ன பதில் சொல்ல போகிறார் என்பதும் தற்போதைய கேள்விக்குறியாக உள்ளது.
