தமிழீழத்திற்கு ஐ.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டறிக்கை

சென்னை: இனப்படுகொலைக்கான நீதி விசாரணையை நடத்தி தமிழீழத்திற்கு ஐ.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, திராவிட தமிழர் பேரவையின் சுப.வீரபாண்டியன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் கோவை ராமகிருஷ்ணன், மே-17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தியாகு, தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் மணியரசன், விடுதலை தமிழ்ப் புலிகள் குடந்தை அரசன், தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் ஈரோடு பொன்னையன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், தமிழ்ப் புலிகள் கட்சி நாகை திருவள்ளுவன், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் நெல்லை முபாரக், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படையின் கருணாஸ் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கை: தமிழீழ விடுதலை புலி தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணையை ஐ.நா.மன்றம் நடத்த வேண்டும் என்று வடக்கு மாகாணத்தின் முதல்வரான விக்னேஷ்வரன் தீர்மானம் நிறைவேற்றினார். தமிழக சட்டமன்றத்தில், சுதந்திர தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், தமிழீழ இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பபட்டது. ஈழத் தமிழர் படுகொலையை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையை இந்திய அரசும், உலக நாடுகளும் மேற்கொள்ள வேண்டும் என்று வீரத் தியாகி முத்துக்குமார் உள்ளிட்ட 19 தமிழர்கள் தீக்குளித்து மாண்டார்கள். இந்த பின்னணியை தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களும், இந்திய நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும், உலக நாடுகளும் உணர்ந்து ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கான நீதி விசாரணையை நடத்த முன்வர வேண்டும் என்றும், சுதந்திர தமிழீழத்துக்கு ஐ.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், தமிழர் காணிகளில் குடியேற்றப்பட்டுள்ள சிங்கள குடியேற்றங்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்றும், ஈழத்தமிழர் தாயகத்திலிருந்து சிங்கள ராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் அதற்கான ஆயத்த வேலைகளைச் செய்ய தமிழகத்தில் உள்ள தமிழர்களும், புலம்பெயர் வாழ் தமிழர்களும் கடமையாற்ற வேண்டும்.

Related Stories: