சென்னை: பாமகவில் தந்தை, மகன் மோதல் உச்சகட்டத்தை எட்டி தற்போது கட்சி இரண்டாக உடைந்துள்ளது. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் வரும் 29ம்தேதி சேலத்தில் பொதுக்குழு, செயற்குழு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அன்புமணி நேற்று எதிர்ப்பு தெரிவித்து இது சட்டவிரோதம், அதில் எடுக்கப்படும் முடிவுகள் எங்களை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் விழுப்புரத்தில் சேலம் பொதுக்குழு, செயற்குழுவின் லோகோவை வெளியிட்டு பாமக கவுரவ தலைவர் ஜிகே மணி எம்எல்ஏ அளித்த பேட்டி: வரும் 29ம்தேதி சேலத்தில் காலை 10.30 மணிக்கு பாமக மாநில தலைமை செயற்குழு கூட்டம், 11.40 மணிக்கு மாநில பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டம் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறோம். இது ராமதாஸ் தலைமையில் நடைபெறும் செயற்குழு கூட்டம், 2026ஐ வரவேற்கும் வகையிலும், 2025க்கு விடைகொடுக்கும் வகையில் ஒரு புத்தாண்டு செயற்குழு, பொதுக்குழு கூட்டமாகும்.
அதுமட்டுமல்லாமல் வரவிருக்கிற 2026 தேர்தலில் பாமக எந்த கூட்டணியில் அமையவிருக்கிறது என்பதை ராமதாஸ் அறிவிக்கிற முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாகும். அன்புமணி தரப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். பாமக தலைமை சார்பில் அத்தகைய அறிவிப்பு ஏதும் அறிவிக்கப்படவில்லை. இது செல்லத்தக்கதல்ல, கட்டுப்படுத்தாது, அத்தகைய அறிவிப்பு ஏதும் செய்யவில்லை என்று சொல்லியிருக்கிறார். இந்த அறிவிப்பு அபத்தமானது, அநாகரிகமானது. இந்த பொதுக்குழு அறிவிப்பை ராமதாஸ் வெளியிட்டார். அவரையே கொச்சைபடுத்தி, அவமானப்படுத்தி விட்டார். பாமக தலைமையின் சார்பில் அத்தகைய அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்பது ஒட்டுமொத்த பாமகவை அவமானப்படுத்துவதாக பார்க்கிறோம். இது வன்மையாக கண்டனத்துக்குரியது. அன்புமணிகூட சென்றவர்கள் தற்போது வருத்தப்படுகிறார்கள். அவசரத்தில் சென்று விட்டோமோ? என்று மனஉளைச்சலில் இருக்கின்றனர். விரைவில் அவர்கள் வருவார்கள். ராமதாஸ் கைதான் ஓங்கியிருக்கும். அதை சேலம் பொதுக்குழுவில் பார்க்கப் போகிறீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.
* அன்புமணியை எதிர்த்து போட்டியா?
அன்புமணி தன்னை எதிர்த்து போட்டியிட உள்ளதாக வௌியாகும் தகவலுக்கு பதிலளித்த ஜி.கே மணி, ‘யார் எங்கு போட்டியிடுகிறார்கள் என்று தெரியவில்லை. தெரிஞ்சா சொல்லுங்க… நான் நிற்கும் இடத்தில் யார் நின்றாலும், போட்டியிட்டுதான் ஆக வேண்டும்’ என்றார்.
* அன்புமணிக்கு தகுதியில்லை: அருள் ஆவேசம்
தைலாபுரத்தில் மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை ராமதாஸ் சந்தித்து வருகிறார். அதன்படி 5வது நாளான நேற்று சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் போட்டியிட வேண்டிய தொகுதிகள் குறித்து கருத்துக்களை கேட்டறிந்தார். கூட்டத்திற்குபின் அருள் எம்எல்ஏ கூறுகையில், நேற்று பெய்த மழையில் இன்றைக்கு முளைத்த காளான் அல்ல நாங்கள். கவுரவ தலைவருக்கு, அன்புமணி கடிதம் அனுப்புவதற்கு எந்தவித தகுதியும் இல்லை, உரிமையும் இல்லை என்றார்.
* பொதுக்குழு கூட்டுவதற்கு அன்புமணிக்கே அதிகாரம்: பாமக வழக்கறிஞர் பாலு பேட்டி
சென்னை: அரியலூரில் பாமக வழக்கறிஞர் பாலு நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாமக கவுரவத்தலைவர் ஜி.கேமணியிடம் கட்சி ஒழுங்கு நடவடிக்கைகளை மீறியது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்து இருந்தோம். இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. பதில் கிடைத்ததும், கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழு கூடி உரிய நடவடிக்கை எடுக்கும். வருகிற 29ம்தேதி பாமக பொதுக்குழு என்ற பெயரில் ஒரு கூட்டம் கூடுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையம் அன்புமணி தலைமையிலான கட்சியை, பாமக என அங்கீகரித்துள்ளது. பொதுக்குழுவை கட்சியின் தலைவர் மட்டுமே கூட்ட முடியும். எனவே அன்புமணிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வேண்டுமானால் அதில் நிறுவனர் (ராமதாஸ்) பங்கேற்று ஆலோசனை வழங்கலாம். எனவே 29ம்தேதி பாமக பொழுக்குழு என சொல்லுவதே தவறு. சிவில் நீதிமன்றத்திற்கு செல்லாமல் பொதுக்குழு, செயற்குழு என கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தும் நடவடிக்கையை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
