பூக்கும் புன்னகை ஒவ்வொன்றிலும் மனம் நிறைகிறேன்: மாளவிகா ஐயரின் பதிவை பகிர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு

சென்னை: மாளவிகா ஐயரின் பதிவை பகிர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவிட்டுள்ளார். தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் விலையில்லா வேட்டி சேலையை ஒவ்வொரு வருடமும் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் வேட்டி சேலையை வழங்கி இருந்தது. இந்தாண்டு பலருக்கும் தமிழ்நாடு அரசு வழங்கிய வேட்டி சேலை மிகவும் பிடிந்திருந்ததால் பலரும் அதை அணிந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதேபோன்று ரேசன் கடைகளில் வழங்கிய புடவையை அணிந்து மாளவிகா ஐயர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இவர் சமூக சேவகர், மனித உரிமை போராளி, மாடல் என பன்முகத் திறமைகளை கொண்டவர். இவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழக அரசின் விலையில்லா பொங்கல் சேலையில் விலை மதிப்பில்லாத புன்னகையுடன் உங்கள் மாளவிகா! பொங்கல் பண்டிகை ஒவ்வொருவரின் மனதில் மகிழ்ச்சியையும் உடலில் உற்சாகத்தையும் கொண்டு வரட்டும்” என பதிவிட்டு இருந்தார். இவரது பதிவை குறிப்பிட்டுள்ள முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், “பூக்கும் புன்னகை ஒவ்வொன்றிலும் மனம் நிறைகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

* யார் இந்த மாளவிகா?
கும்பகோணத்தை சேர்ந்தவர் மாளவிகா ஐயர். இவரது தந்தை கிருஷ்ணன் ராஜஸ்தானில் இன்ஜினியராக இருந்தவர். ராஜாஸ்தானில் உள்ள பீகானிர் நகரில் குடும்பத்துடன் இவர் வசித்து வந்தார். கடந்த 2002ம் ஆண்டு தனது 13 வயதில் மாளவிகா ஐயர் விளையாடும்போது குப்பையில் கிடந்த மர்ம பொருள் வெடித்து தனது 2 கைகளையும் இழந்தவர். எனினும், மன உறுதியுடன் படித்து முனைவர் பட்டம் பெற்றவர். சமூக சேவகர், மனித உரிமை போராளி, மாடல் என பன்முகத் திறமைகளை வளர்த்துக் கொண்டவர். கடந்த 2020ம் ஆண்டு மகளிர் தினத்தில், பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை ஒருநாள் நிர்வகிக்கும் பொறுப்பு 7 சாதனைப் பெண்களுக்கு வழங்கப்பட்டது. அதில் ஒரு சாதனைப் பெண்தான் இந்த டாக்டர் மாளவிகா ஐயர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பூக்கும் புன்னகை ஒவ்வொன்றிலும் மனம் நிறைகிறேன்: மாளவிகா ஐயரின் பதிவை பகிர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு appeared first on Dinakaran.

Related Stories: