சென்னை: மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் போர் சூழல் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவுக்கான விநியோக சங்கிலி பெருமளவு முடங்கியுள்ளது. இத்தகைய உலகளாவிய நெருக்கடி ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணித்து, உள்நாட்டில் மாற்று ஏற்பாடுகளை செய்வதிலும், போதுமான எரிவாயு இருப்பை உறுதி செய்வதிலும் இந்திய அரசு முற்றிலும் தவறிவிட்டதாக பொருளாதார நிபுணர்களும், வணிகர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.
‘போர் சூழலில் சிறு, குறு வணிகர்களை பாதுகாக்க எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் ஒன்றிய அரசு மெத்தனம் காட்டி வருகிறது. இதன் விளைவாகவே நாங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்தில் நிற்கிறோம்,’ என உணவக உரிமையாளர்கள் கொந்தளிக்கின்றனர். சென்னையின் பல்வேறு பகுதிகளில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களின் விநியோகம் கடந்த சில நாட்களாகவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை ஆங்காங்கே கிடைத்த சிலிண்டர்களை அதிக விலை கொடுத்து வாங்கி எப்படியோ கடைகளை நடத்தி வந்த ஓட்டல் உரிமையாளர்கள், தட்டுப்பாடு தற்போது உச்சத்தை எட்டியுள்ளதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.இதுகுறித்து சென்னை திருவல்லிக்கேணியில் இயங்கி வரும் பிரபல தனியார் உணவகத்தின் உரிமையாளர் கூறியதாவது:
சிலிண்டர் விநியோகம் சீராக இல்லாததால், எந்த நேரத்தில் காஸ் தீர்ந்துபோகுமோ என்ற அச்சத்துடனேயே கடையை நடத்த வேண்டியுள்ளது. இதனால், அனைத்து உணவுகளையும் முழுமையாக தயாரிக்க முடிவதில்லை.குறிப்பாக, மதிய நேர முழு சாப்பாடு மற்றும் ஸ்பெஷல் உணவுகள் தயாரிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டோம். குறைந்த அளவிலான சிற்றுண்டி மற்றும் குழம்பு வகைகளை மட்டுமே தயாரித்து வருகிறோம். கையில் இருக்கும் காஸ் இருப்பை வைத்து மட்டுமே இப்போது கடையை ஓட்டிக்கொண்டிருக்கிறோம். நாளை சிலிண்டர் வந்தால் தான் கடையைத் திறக்க முடியும், இல்லை என்றால் கடையை மூட வேண்டியது தான்,’ என விரக்தியுடன் தெரிவித்தார்.சென்னையில் அதிகம் பேர் ஓட்டல் உணவுகளை அதிகம் நம்பி உள்ளனர். நிலைமையை ஓரளவாவது சமாளிக்க, சில உணவகங்கள் மாற்று ஏற்பாடாக அதிக மின்சாரம் செலவாகும் ‘மின்சார அடுப்புகளை’ பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
பெரிய உணவகங்கள் மட்டுமின்றி, டீக்கடைகளும் இந்த தட்டுப்பாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதே நிலை தொடர்ந்தால், சென்னையில் உள்ள ஆயிரக்கணக்கான சிறு, குறு உணவகங்களும், தேநீர் கடைகளும் மூடப்படும் அபாயம் எழுந்துள்ளது. அதே போல், சென்னையில் ஆட்டோக்களுக்கான எல்.பி.ஜி எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காஸ் கிடைக்காமல் பல கிலோமீட்டர் தூரம் ஆட்டோக்களை ஓட்டுநர்கள் தள்ளிக்கொண்டு செல்லும் அவல நிலை அரங்கேறியுள்ளது.
சென்னையில் இயங்கும் லட்சக்கணக்கான ஆட்டோக்களில் பெருமளவிலானவை எல்.பி.ஜி எரிவாயுவை நம்பியே இயங்குகின்றன. ஆனால், கடந்த சில நாட்களாகச் சென்னையில் உள்ள பெரும்பாலான ஆட்டோ எல்.பி.ஜி பங்க்குகளில் ‘நோ ஸ்டாக்’ என்ற பலகைகளே தொங்குகின்றன. காஸ் தட்டுப்பாட்டால் சென்னையில் பாதிக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடவில்லை. தினக்கூலியை நம்பி வண்டி ஓட்டும் ஆயிரக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்களின் குடும்பங்கள் இன்று வருமானமின்றி தவிக்கின்றன. வண்டிக்கு கட்ட வேண்டிய தவணை, வீட்டு வாடகை, குழந்தைகளின் கல்வி செலவு என அனைத்தையும் எப்படி சமாளிப்பது என தெரியாமல் அவர்கள் திகைத்து நிற்கின்றனர். போதிய ஆட்டோக்கள் இயங்காததால், பள்ளி செல்லும் குழந்தைகள், முதியவர்கள், மருத்துவமனை செல்வோர் மற்றும் அன்றாட பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
