சென்னை: உங்கள் கனவு நிறைவேறிவிட்டது. இனி மக்களின் கனவுகளை நிறைவேற்ற இன்றிலிருந்து நீங்கள் புறப்படுங்கள். உங்களை போல இன்னும் பலரை நம்முடைய திராவிட மாடல் அரசு உருவாக்குவதற்கு தொடர்ந்து துணைநிற்கும் என இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை விக்டோரியா பொது அரங்கத்தில் நடைபெற்ற அகில இந்திய குடிமை பணித் தேர்வு வெற்றியாளர்களுக்கான பாராட்டு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது: அகில இந்திய குடிமை பணி தேர்வில் கடுமையான உழைப்பை கொடுத்து, அதில் வெற்றி பெற்றிருக்கக்கூடிய உங்கள் எல்லோருக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். உலக அளவில் மிகவும் கடினமான தேர்வு என்று யுபிஎஸ்சி தேர்வைத்தான் சொல்வார்கள். அப்படிப்பட்ட தேர்வை, உங்களில் சிலர் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றிருப்பீர்கள். சிலர் பல ஆண்டுகளாக முயற்சி செய்து வெற்றியடைந்திருப்பீர்கள். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னால், என்ன நிலை இருந்தது என்று எல்லோருக்கும் நன்றாக தெரியும்.
தமிழ்நாட்டிலிருந்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றியடையும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துகொண்டே வந்தது. நம்முடைய திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு, இதை கவனித்து, இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று அதற்கான பல்வேறு முயற்சிகளை நாம் எடுத்தோம். நான் முதல்வன் ஊக்கத்தொகை, உயர் பயிற்சி, நேர்முக தேர்வுகளை எதிர்கொள்ளக்கூடிய சிறப்பு பயிற்சி என்று பல்வேறு முன்னெடுப்புகளை நம்முடைய அரசு எடுத்தது. நம்முடைய அரசு எடுத்த முயற்சிகளுக்கு, அண்மைக் காலமாக நல்ல பலன் கிடைத்துக் கொண்டு வருகிறது. இதற்காக உழைத்திருக்கக்கூடிய அதிகாரிகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் என்னுடைய நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஆண்டு 60 பேர் நம்முடைய மாநிலத்திலிருந்து தேர்வாகியிருக்கிறீர்கள். அதில், 56 பேர் நான் முதல்வன் திட்டத்தால் பயனடைந்தவர்கள் என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. இந்த எண்ணிக்கை இன்னும் உயர வேண்டும். இங்கு வந்திருக்கக்கூடிய உங்களைப் பார்த்து ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு இன்னும் பல இளைஞர்கள் தமிழ்நாட்டிலிருந்து இந்தியா முழுவதும் பல மாநிலங்களுக்குச் சென்று, பல்வேறு மாவட்டங்களில், கலெக்டராக, பல்வேறு துறைகளில் செயலாளராக, நாட்டின் வளர்ச்சிக்கும் எளிய மக்களுக்கும் பணியாற்ற வேண்டும். ஏன், வெளிநாடுகளுக்கும் இந்திய தூதர்களாக சென்று, நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை நீங்கள் மேம்படுத்த வேண்டும்.
அதிகாரிகள் என்றால், அலட்டலாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை, சாதாரண மக்களிடம் கூட அன்பாக, பண்பாக நடந்துகொண்டால் அதுதான் உங்கள் பெயரை காலத்திற்கும் நிலைக்கச் செய்யும். அப்படி, அன்பும், அடக்கமும், சமூகநீதி பார்வையும் அடிப்படையாக வைத்து இந்தியாவின் ஏற்றத்திற்கு நீங்கள் ஒவ்வொருவரும் உழைப்பீர்கள். தமிழ்நாட்டிற்கு ஒரு சிறப்பான பெருமையைத் தேடித் தருவீர்கள் என்று நான் நம்புகிறேன்.
இனிமேல், உங்களின் வாழ்க்கை மிகவும் பிசியாக மாறிவிடும். என்னை சுற்றியிருக்கும் ஐஏஎஸ் ஆபிசர்ஸ் பாருங்கள்; ஆபீசர்சஸ் எல்லோரையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். ரெஸ்ட் என்பதே பெரும்பாலும் கிடையாது.
அப்படிப்பட்ட கேரியர் தேர்ந்தெடுத்திருக்கும் உங்களுக்கு நான் தனிப்பட்ட முறையில் ஒரு அட்வைஸ் தர நினைப்பது, அதிகாரிகளாக நீங்கள் நாட்டை கவனிக்க வந்துவிட்டாலும், உங்கள் வீட்டையும் குடும்பத்தையும் அதே அக்கறையுடன் நீங்கள் கவனித்துக்கொள்ள வேண்டும். இப்போது, உங்கள் கனவு நிறைவேறிவிட்டது. இனி மக்களின் கனவுகளை நிறைவேற்ற இன்றிலிருந்து நீங்கள் புறப்படுங்கள். உங்களை போல இன்னும் பலரை நம்முடைய திராவிட மாடல் அரசு உருவாக்குவதற்கு தொடர்ந்து துணைநிற்கும். இந்த நேரத்தில், முக்கியமாக இந்த வெற்றிக்காக கடுமையாக உழைத்த சுதாகரனுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
