மேம்பட்டதொரு தமிழ்நாட்டை உருவாக்குவதுதான் இலக்கு: 5 புதிய ரயில் சேவையை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு

​திருச்சி: மேம்பட்ட இந்தியாவை உருவாக்க, மேம்பட்டதொரு தமிழ்நாட்டை உருவாக்குவதுதான் எங்களுடைய இலக்கு என்று திருச்சியில் பிரதமர் மோடி 5 புதிய ரயில் சேவைகளை துவக்கி வைத்து பேசினார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதனால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கடந்த ஜனவரி மாதம் மதுராந்தகத்திலும், கடந்த 1ம் தேதி புதுச்சேரி மற்றும் மதுரையிலும் பிரசாரம் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். இந்நிலையில் தேர்தல் பிரசாரத்துக்காக 3வது முறையாக பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்தார்.

திருச்சி பஞ்சப்பூரில் நேற்று மாலை நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 4.48 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தார். வேட்டி சட்டையுடன் வந்த பிரதமரை, ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் விழா நடைபெறும் இடமான பஞ்சப்பூருக்கு சென்றார். முதலில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ஒன்றிய அரசின் விழா நடந்தது. இதில் சுமார் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.

அதன்படி சென்னை மணலியில் அமைக்கப்பட்டுள்ள ஆண்டுக்கு 6.72 லட்சம் மெட்ரிக் டன் திறன் கொண்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் மசகு எண்ணெய் கலவை ஆலையை மோடி அர்ப்பணித்தார். பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 370 கி.மீ நீளமுள்ள 89 கிராமப்புற சாலைகளையும் திறந்து வைத்தார். பெட்ரோலிய துறையில், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் சுமார் ரூ.3,680 கோடி முதலீட்டில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் நகர எரிவாயு விநியோக வலையமைப்பிற்கும், தேசிய நெடுஞ்சாலை ‘என்ஹெச் 81’ கங்கைகொண்ட சோழபுரம் அருகே பசுமை புறவழிச்சாலைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

நாகர்கோவில் சர்லாபள்ளி, போத்தனூர் (கோவை) தன்பாத் அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், ராமேஸ்வரம்- மங்களூரு சென்ட்ரல் விரைவு ரயில், நெல்லை-மங்களூரு விரைவு ரயில், மயிலாடுதுறை-திருவாரூர்-காரைக்குடி பயணிகள் ரயில் சேவைகளை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், ‘‘இயற்கை எரிவாயு என்பது சூழலுக்கு நேசமான எரிபொருள். இது காற்று மாசினைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. 8 ஆண்டுகால இந்த திட்டத்தால் சுற்றுச்சூழல் தாக்கம் எப்படி இருக்கும் ஏன்என்றால், இது சுமார் 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இருக்குமாம்.

புதிய சாலைகள் தொடங்கி வைத்து இருப்பதால், மாணவர்களால் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சிரமம் ஏதுமின்றி பயணிக்க முடிகின்றது. விவசாயிகளால் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தங்களுடைய விளைபொருட்களை விற்கவோ, தேவையான உள்ளீடுகளை வாங்கவோ முடிகின்றது. மொத்தத்திலே ஒவ்வொரு சாலையும் ஊரகப்பகுதி பொருளாதாரத்தை உயர்த்தி சுலபமாக வாழும் தன்மையினை அதிகரிக்கின்றது. கடந்த வாரம் நான் மதுரை வந்தபோது அம்ரித் பாரத் திட்டத்தின்படி எட்டு நவீன மறுவடிவமைக்கப்பட்ட ரயில் நிலையங்களைத் தொடங்கி வைத்தோம். இன்று பல புதிய ரயில் சேவைகளுக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டிருக்கின்றது.

இவை நாகர்கோவில், கோயம்புத்தூர், ராமேஸ்வரம், திருநெல்வேலி, மயிலாடுதுறை, காரைக்குடி ஆகிய இடங்களை மற்ற பகுதிகளோடு இணைக்கின்றது. இந்த புதிய ரயில் சேவைகள் காரணமாக சுற்றுலாத்துறை அதிகரிப்பதோடு, உள்ளூர் பொருளாதாரத்திற்கு ஊக்கம் அளிக்கப்பட்டு இளைஞர்களுக்கு பல வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மேம்பட்ட இந்தியாவை உருவாக்க, மேம்பட்டதொரு தமிழ்நாட்டை உருவாக்குவதுதான் எங்களுடைய இலக்கு. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு முழு அர்ப்பணிப்போடு இருக்கின்றது மத்திய அரசு. மாநிலத்தின் மேன்மைக்கு நாங்கள் அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வருகின்றோம். இப்படி மேலும் தொடர்ந்து பாடுபட்டும் வருவோம். இவ்வாறு அவர் பேசினார்.

* மோடி வருகைக்கு எதிர்ப்பு திருச்சியில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்
திருச்சிக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி அண்ணாமலை நகரில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மேலாடையின்றி அரை நிர்வாண போராட்டம் நேற்று நடந்தது. இந்த போராட்டத்தில் பிரதமர் மோடி, ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறுகையில், ‘விவசாய விளை பொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை கேட்டு தொடர்ந்து போராடி வருகிறோம். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை மீண்டும் தமிழ்நாட்டிற்கு திருப்பி அனுப்பி விட்டனர். இதை கண்டித்தும், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தற்போது தமிழ்நாடு வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றார்.

Related Stories: