சென்னை: ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா போர் காரணமாக விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால், ஏர் இந்தியா விமான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்களின் பயணிகள் கட்டணம் இன்று (12ம் தேதி) முதல் அதிகரிக்கப்படுகிறது. அந்த கட்டண உயர்வு, 3 கட்டங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, உள்நாடு மற்றும் சார்க் நாடுகளான இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், பூடான் உள்ளிட்ட நாடுகளுக்கான சர்வதேச விமானங்கள் அனைத்திற்கும் ரூ.399 கட்டணம் உயர்த்தப்படுகிறது.மேற்கு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு 10 அமெரிக்க டாலர் (ரூ.920) கட்டணம் உயர்கிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு 20 அமெரிக்க டாலர் (ரூ.1,840) கட்டண உயர்வும், ஆப்பிரிக்க நாடுகளுக்கு, 30 அமெரிக்க டாலர் (ரூ.2,760) கட்டண உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு இயக்கப்படும் விமானங்களுக்கு முன்பு எரிபொருள் கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்தது. இனிமேல் சிங்கப்பூர் சென்று வரும் விமானத்திற்கும் எரிபொருள் கட்டணம் வசூலிக்கப்படும்.
இரண்டாம் கட்ட கட்டண உயர்வாக இம்மாதம் 18ம் தேதி அதிகாலையில் இருந்து, ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு செல்லும் விமானங்களுக்கு கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. அதன்படி ஐரோப்பிய நாடுகளுக்கு 25 அமெரிக்க டாலர் (ரூ.2,300) கட்டண உயர்வும், வட அமெரிக்காவுக்கு, 50 அமெரிக்க டாலரும் (ரூ.4,594), ஆஸ்திரேலியாவுக்கு 50 அமெரிக்க டாலரும் (ரூ.4,594) கட்டண உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்டண கட்டண உயர்வாக, ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென்கொரியா நாடுகளுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்களுக்கு, கட்டண உயர்வுகள் குறித்து பின்பு அறிவிக்கப்படும். ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தொடர்ந்து மற்ற விமான நிறுவனங்களும் கட்டணங்களை பெருமளவு உயர்த்த தயாராகிக் கொண்டு இருப்பதால், விமான பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
