சென்னை: வீட்டுக்கு வழங்கப்படும் சிலிண்டர் 25 நாட்களுக்கு கையிருப்பு உள்ளதாகவும், ஓட்டல்களுக்கு எரிவாயுவுக்கு பதிலாக சலுகை விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் என்று ஓட்டல் உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக வர்த்தக மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுகள் நிலவுகின்றன. இந்த இக்கட்டான சூழலை சமாளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தலைமை செயலகத்தில் தமிழ்நாடு தென்னிந்திய உணவகங்கள் சங்கம், தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு சங்கங்கள், தமிழ்நாடு சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கம், கோவை மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்கங்களை அழைத்து பேசினோம். வீட்டுக்கு வழங்கப்படும் சிலிண்டர் வழங்குவதில் 20, 25 நாட்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று சொல்லி உள்ளனர். வர்த்தக சிலிண்டர்தான் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறி உள்ளனர். ஓட்டல் உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கை வைத்தனர். அரசு சலுகை விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர். அரசு உறுதுணையாக இருக்கும் என்று கூறியுள்ளோம்’’ என்றார். கூட்டத்துக்கு பிறகு எம்எஸ்எம்இ சங்க நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த இரண்டு நாட்களாக சிலிண்டர் கிடைக்காததால் ஓட்டல்கள், ஸ்டீல் ஃபேப்ரிகேஷன், ஆட்டோ பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இப்போது ஆர்டர் நிறைய உள்ளது. ஆனால், சப்ளை கொடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதையெல்லாம் சரி செய்ய வேண்டும் என்றால் சிலிண்டர் பிரச்னையை சரி செய்வதுதான் ஒரே வழி. தமிழக அரசு இந்த விவகாரத்தை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, தட்டுப்பாட்டை சீர்செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
