சொன்னாரு: திமுகவின் 2021ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கென தனித்துறை மற்றும் நல வாரியம் அமைக்கப்படும் என மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார்.
செஞ்சாரு: உலகெங்கிலும் பரவி வாழும் தமிழர்கள் தங்களின் தாய் மண்ணுடன் கொண்டுள்ள உறவை மேம்படுத்தவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்த பின்னர், வெளிநாடு வாழ் தமிழர்களின் நலனை பேணிக்காக ‘‘அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை’’ என்ற தனித் துறையை அமைக்கப்பட்டது. இதற்கென தனி அமைச்சராக தற்போது ஆவடி.நாசர் இருந்து வருகிறார்.
மேலும் அயலக தமிழர்களுக்கென 15 உறுப்பினர்களைக் கொண்ட நல வாரியமும் முறைப்படி அமைக்கப்பட்டது. இந்த வாரியம் வெளிநாடுகளிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வாழும் தமிழர்களின் நலனுக்காக செயல்படுகிறது. இதில், 18 முதல் 55 வயது வரை உள்ள அயலக தமிழர்கள் என்.ஆர்.தமிழ் இணையதளத்தில் ரூ.200 செலுத்தி உறுப்பினராகப் பதிவு செய்யலாம். இதில், பதிவு செய்பவர்களுக்குப் பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதன் மூலம் அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்களை பெற முடியும். இதுதவிர, அயலக தமிழர்களுக்காக பல முன்னோடி திட்டங்கள் அரசின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு விபத்துக் காப்பீடு, ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
வெளிநாடுகளில் பணிபுரியும் போது உயிரிழக்கும் குறைந்த வருமானம் கொண்ட தமிழர்களின் குழந்தைகளுக்குக் கல்வி மற்றும் திருமண நிதியுதவி வழங்கப்படுகிறது. போர் சூழலால் தாயகம் திரும்பிய தமிழர்கள் சுயதொழில் தொடங்க ரூ.2.5 லட்சம் வரை மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கப்படுகிறது. மேலும், வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு, பாஸ்போர்ட் அல்லது விசா தொடர்பான சிக்கல்களை சந்திக்கும் தமிழர்களுக்கு இலவச சட்ட உதவி வழங்கப்படுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ம் தேதி உலகெங்கிலும் உள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அயல தமிழர்களின் குழந்தைகள் தமிழ் மொழியை கற்க தமிழ் இணைய கல்விக்கழகம் மூலம் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கனியன் பூங்குன்றனாரின் வரிகளுக்கு ஏற்ப, உலகத் தமிழர்களின் உற்ற நண்பனாக தமிழ்நாடு அரசு திகழ்கிறது. ஒரு தனி அமைச்சகம் மற்றும் வாரியம் மூலம் புலம்பெயர்ந்த தமிழர்களின் குறைகளை தீர்ப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச இடர்வுகளில் துரிதமான செயல்பாடு;
* கடந்த 2022ம் ஆண்டு ‘உக்ரைன் – ரஷ்யா’ போரின் போது சிக்கி தவித்த மாணவர்களை மீட்க ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டு 1,890 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன.
* கடந்த 2023ம் ஆண்டு சூடான் உள்நாட்டு போரில் சிக்கிய தமிழர்களை ‘ஆபரேஷன் காவிரி’ மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர்.
* கடந்த 2024ம் ஆண்டு குவைத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்கள் மாநில அரசின் துரித நடவடிக்கையால் தாயகம் கொண்டுவரப்பட்டன. இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணமும் வழங்கப்பட்டன.
* கம்போடியா – தாய்லாந்து வேலைவாய்ப்பு மோசடியில் சிக்கி தவித்த நுற்றுக்கணக்கான தமிழர்களை தூதரகங்கள் மூலம் மீட்கப்பட்டனர்.
* தற்போது இஸ்ரேல் – ஈரான் போரில் ஈடுபட்டு வரும் நிலையில் அங்குள்ள தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய துறை ரீதியான நடவடிக்கைகளை அயலக தமிழர் துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது வரை தமிழர்களுடன் தொடர்பு கொண்டு நிலைமை குறித்து பேசிவருகின்றனர்.
