உணவு தயாரிக்க முடியாமல் உரிமையாளர்கள் புலம்பல் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் திருமணங்களுக்கு சிக்கல்

கோவை: வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக திருமண மண்டபங்களுக்கு காஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டு இருப்பதால், உணவு தயாரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், வரும் காலங்களுக்கு திருமணங்கள் நடத்த முடியாத சூழல் ஏற்படும் என்று திருமண மண்டப உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சத்தியமங்கலத்தை சேர்ந்த திருமண மண்டப உரிமையாளர் ஆனைக்கொம்பு ராம் கூறியதாவது: எங்களது மண்டபத்தில் ஒரு திருமண விழா நடக்க உள்ளது. இதற்கான வரவேற்பு விழாவும் நடக்கிறது.

இந்த திருமண நிகழ்ச்சிக்காக ஆயிரம் பேருக்கு சமையல் செய்ய வேண்டும். இதற்காக, வர்த்தக காஸ் சிலிண்டர் கேட்ட போது, சிலிண்டர் அளிக்க முடியாது என ஏஜென்சிகாரர்கள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். அவர்கள், ஓட்டல்கள், கேண்டீன், திருமண மண்டபம் போன்றவைக்கு காஸ் அளிக்க இயலாது எனவும், கல்லூரிகள், மருத்துவமனைகளுக்கு மட்டுமே அளிக்க முடியும் எனவும் கூறினர். விறகு அடுப்பில் சமைக்க வேண்டும் என்றால் அதற்கான உபகரணங்கள் எங்களிடம் இல்லை. இந்த நெருக்கடியான நிலையால் திருமண மண்டபத்தில் உணவு தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. மேலும், வளைகுடா நாடுகளின் போர் காரணமாக வீட்டு உபயோக சிலிண்டர் முன்பதிவு செய்ய 25 நாட்களாக உயர்த்தி உள்ளனர்.

மெஸ், திருமண மண்டபம், ஓட்டல்களுக்கு வர்த்தக சிலிண்டர் கிடையாது என கூறிவிட்டனர். மொத்தத்தில் வீட்டு உபயோகம் மற்றும் வர்த்தக சிலிண்டர் இல்லாமல் என்ன செய்வது என தெரியவில்லை. பிற மாவட்டங்களில் உள்ள திருமண மண்டபங்களில் உள்ள உரிமையாளர்களை தொடர்பு கொண்டு அந்த மாவட்டத்தின் நிலையை கேட்ட போது அவர்களும் வர்த்தக சிலிண்டர் கிடைப்பது இல்லை என்ற கருத்தை கூறுகின்றனர். இந்த போரினால் ஒரே நாளில் எங்களின் நிலைமை மாறியுள்ளது. இதனால், திருமண மண்டப உரிமையாளர்கள், மெஸ் வைத்து இருப்பவர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் என அனைவரும் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறோம். இதற்கு என்ன தீர்வு என தெரியவில்லை. இருப்பினும், எங்களுக்கான தீர்வை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* ஒரு உடலுக்கு 19 கிலோ காஸ் தேவை சடலங்களை தகனம் செய்வதிலும் பிரச்னை: விறகுகள் மூலம் எரியூட்ட நடவடிக்கை
கோவை: கோவை மாவட்டத்தில் வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மாநகராட்சி மயானங்களில் சடலங்களை எரியூட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க அதிகாரிகள் பழைய முறைப்படி விறகுகள் மூலம் எரியூட்டவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை மாநகராட்சி பகுதியில் 11 மின் மயானங்களில் இறந்தவர்களின் சடலங்கள் தகனம் செய்யப்படுகிறது. மின்சாரம் மற்றும் எல்பிஜி மூலம் இயங்கும் இயற்கை எரிவாயு தகன மேடைகள் இருக்கின்றன. இதன்மூலமாக, இறந்தவர்களின் சடலங்கள் வழக்கமாக எரியூட்டப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தற்போது வர்த்தக சிலிண்டர் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக இயற்கை எரியூட்டும் மையங்களில் சடலங்களை எரியூட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த மையங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மட்டுமே சடலங்களை எரியூட்ட கூடிய அளவிலான சிலிண்டர்கள் கையிருப்பில் இருக்கிறது. இதையடுத்து, மாநகராட்சி சார்பில் மின் மயானங்களில் சடலங்களை எரியூட்டவும், விறகுகள் மூலம் சடலங்களை எரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்,“மாநகராட்சியில் 11 மின் மயானங்கள் செயல்படுகிறது. இந்த மயானங்களின் மூலமாக ஒரு நாளைக்கு 32 சடலங்கள் எரியூட்டப்படுகின்றன. ஒரு சடலத்திற்கு 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் தேவைப்படுகிறது. தற்போது, இருப்பில் உள்ள வர்த்தக சிலிண்டர்களின் மூலம் 3 நாட்களுக்கு தாக்குப்பிடிக்க முடியும். இதில், தட்டுப்பாடு ஏற்பட்டால் மின்சாரம் மூலம் செயல்படும் 3 மின் மயானங்கள் இருக்கின்றன. இதில், கூடுதல் சடலங்கள் எரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தவிர, தேவைப்பட்டால் பழைய முறைப்படி விறகுகள் மூலமாக சடலங்கள் எரியூட்டப்படும். இதற்கு தேவையான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு இருக்கிறது” என்றனர்.

Related Stories: