சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயங்கும் 12,467 பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவ, மாணவியர் 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 பேர் மற்றும் தனித் தேர்வர்கள் 26 ஆயிரத்து 196 என மொத்தம் 9 லட்சத்து 9 ஆயிரம் பேர் 10ம் வகுப்பில் பங்கேற்றனர். இது தவிர, 10ம் வகுப்பில் 395 சிறைவாசிகள் மேலும், 12292 மாற்றுத்திறன் மாணவ, மாணவியரும் தேர்வு எழுதினர். 10ம் வகுப்புக்கு 4219 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் நடக்கும் நாட்களில், 49 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தேர்வில் முறைகேடுகளை தடுக்க சுமார் 4900க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர். தேர்வறை கண்காணிப்பாளர்கள் 49 ஆயிரத்து 542 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். டிஸ்லெக்சியா மற்றும் மாற்றுத் திறன் கொண்ட மாணவ, மாணவியருக்காக சொல்வதை எழுதுவோர் எண்ணிக்கையை பொருத்தவரையில் 10ம் வகுப்பு தேர்வுக்கு 12 ஆயிரத்து 292 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு நடக்கும் வளாகத்துக்குள் ஆசிரியர்கள் உள்பட யாரும் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.நேற்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. முன்னதாக காலை 8.30 மணி அளவில் இருந்தே மாணவ, மாணவியர் தேர்வு மையங்களுக்கு வந்து காத்திருந்தனர். அவர்கள் 9.30 மணிக்கு தேர்வு அறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 10 மணி அளவில் விடைத்தாள் வழங்கப்பட்டன. அதில் மாணவ, மாணவியர் தங்கள் விவரங்களை குறிப்பிட 5 நிமிடங்கள் வழங்கப்பட்டது. பின்னர் கேள்வித்தாள் வழங்கப்பட்டது. அதை படித்து பார்க்க வழக்கம் போல 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. 10.15 மணிக்கு விடை எழுததொடங்கினர். மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிந்தது.
முதல்நாளான நேற்று தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களுக்கு தேர்வு நடந்தது. நேற்றைய தேர்வில் வஙழ்கப்பட்ட கேள்வித்தாள் எளிமையாக இருந்ததாக மாணவ மாணவிர் தெரிவித்தனர். இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் மேனிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்துக்கு அமைச்சர் நேரில் சென்று மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்தி வாழ்த்து தெரிவித்தார். அவருடன் அரசு கூடுதல் செயலாளர் சந்திரமோகன், பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன், அரசுத் தேர்வுகள் இயக்குநர் சசிகலா ஆகியோரும் சென்றனர்.
