மாநகராட்சியின் 7 மண்டலங்களில் கட்டிட கழிவு அகற்றும் பணி தீவிரம்: மேயர் பிரியா தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் முதற்கட்டமாக 7 மண்டலங்களில் கட்டிட கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது, என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள கட்டிட கழிவுகளை அகற்றும் வகையில், முதற்கட்டமாக தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய 7 மண்டலங்களில் 59 வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை கொண்டு கட்டிட கழிவுகளை அகற்றும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகளை மேயர் பிரியா நேற்று ரிப்பன் கட்டிட வளாகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது, மேயர் பிரியா பேசியதாவது: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் பேருந்து சாலைகள் மற்றும் உட்புற சாலைகள், பூங்காக்கள், மயானபூமிகள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் தீவிரத் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குப்பைகள் மற்றும் கட்டிடக் கழிவுகள் அகற்றப்பட்டது. மேலும், கட்டிட கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவதை தவிர்க்கும் வகையில், 15 மண்டலங்களிலும் இடம் நிர்ணயம் செய்யப்பட்டு, அந்த இடங்களில் மட்டுமே கட்டிட கழிவுகளை கொட்ட வேண்டும், என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய 7 மண்டலங்கள் முழுவதும் சாலைகள் மற்றும் தெருக்களில் உள்ள கட்டிடக் கழிவுகள், 59 வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் மூலம் தீவிரமாக அகற்றப்பட்டு, அந்தந்த மண்டலங்களில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் சேகரித்து, பின்னர் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படும். இந்தப் பணிகளுக்காக 2 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட 13 வாகனங்கள், 5 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட 8 வாகனங்கள், 8 பாப்காட் வாகனங்கள், 15 டிப்பர் லாரிகள், 15 பொக்லைன் வாகனங்கள் என மொத்தம் 59 வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இப்பணிகள் இந்த மண்டலங்களில் இரண்டு வார காலத்தில் மேற்கொள்ளப்பட்டு கட்டிட கழிவுகள் அகற்றப்படும். இதை தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 8 மண்டலங்களில் தீவிரமாக கட்டிட கழிவுகளை அகற்றும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், நிலைக்குழுத் தலைவர் (பொதுசுகாதாரம்) கோ.சாந்தகுமாரி, கண்காணிப்பு பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை) கே.விஜயகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post மாநகராட்சியின் 7 மண்டலங்களில் கட்டிட கழிவு அகற்றும் பணி தீவிரம்: மேயர் பிரியா தகவல் appeared first on Dinakaran.

Related Stories: