ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உருளைக்கிழங்கு அறுவடை பணிகள் மும்முரம்

ஊட்டி : ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் விளைந்த உருளைகிழங்குகளை அறுவடை செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலைக்காய்கறி விவசாயம் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு உருளைக்கிழங்கு, பீட்ரூட், பீன்ஸ், முட்டைக்கோஸ், முள்ளங்கி உட்பட பல்வேறு மலை காய்கறிகள் பயிரிடப்படுகிறது. எனினும் அதிகளவு உருளைக்கிழங்கு மற்றும் கேரட் பயிரிடப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கு சுவை அதிகம் என்பதால், விலை அதிகமாக கிடைப்பது வாடிக்கை. இதனால், பிற மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அதிகளவு உருளைக்கிழங்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளான முத்தோரை பாலாடா, கேத்தி பாலாடா, கொல்லிமலை, கோலனி மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டது.

போது நல்ல விளைச்சலை தந்த நிலையில், தற்போது அறுவடை பணிகள் துவக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் அதிகாலை நேரங்களில் குளிரையும் பொருட்படுத்தாமல் உருளைக்கிழங்கு பயிர்களை அறுவடை செய்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கு கணிசமான அளவு விலை கிடைத்து வருகிறது. 45 கிலோ கொண்ட ஒரு மூட்டை உருளைக்கிழங்கிற்கு ரூ.1400 முதல் ரூ.1800 வரை விலை கிடைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் உருளைக்கிழங்கு அறுவடையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

The post ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உருளைக்கிழங்கு அறுவடை பணிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Related Stories: