சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய குழுவினர் நேரில் வருகை தந்து விசாரணை நடத்த உள்ளனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் மாணவி கடந்த 23ம் தேதி இரவு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரிக்க, உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், காவல் துணை ஆணையர்கள் சினேக பிரியா ஐமான் ஜமால் , பிருந்தா ஆகிய 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோட்டூர்புரம் மகளிர் காவல் நிலைய போலீஸார் பதிவு செய்த எஃப்ஐஆர், கைதான ஞானசேகரன் பற்றிய விவரங்கள், புலனாய்வு விசாரணை விவரங்கள் ஆகியவை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன. ஞானசேகரனின் செல்போனில் இருந்த வீடியோக்கள், எஃப்ஐஆர் தகவல் கசிந்தது, அதை 14 பேர் பார்வையிட்டது ஆகியவை தொடர்பாகவும் விசாரணை தொடங்கியது. இந்த வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய குழுவினர் விசாரணை நடத்த உள்ளனர்.
மகளிர் ஆணையத்தின் உண்மை கண்டறியும் குழுவினரான ஆணையத்தின் உறுப்பினர் மம்தா குமாரி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீக்சித் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்த உள்ளனர். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்தை குழு பார்வையிடுகிறது. மாணவிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் எவை என்று குழு ஆய்வுசெய்ய உள்ளது. சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடம் குழுவினர் பேசவும் வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
The post அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய குழுவினர் விசாரணை..!! appeared first on Dinakaran.