நீங்கள் உயிரிழக்கும் வரை கல்வி உங்களுடனே இருக்கும்: கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர்

போபால்: இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர், தான் தற்போது பிஎச்டி பட்டம் பெறப் படித்து வருவதாகவும், கிரிக்கெட் விளையாடும்போது கல்வியைத் தொடருமாறு சக நாட்டு வீரர்களுக்கு அறிவுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

2021ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ. 23.5 கோடிக்கு கேகேஆர் அணியால் வாங்கப்பட்டார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் 370 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில் கல்வி குறித்து மனம் திறந்த இந்திய வீரர் வெங்கடேஷ், “நீங்கள் உயிரிழக்கும் வரை கல்வி உங்களுடனே இருக்கும். அடுத்த நேர்காணலில், டாக்டர் வெங்கடேஷ் ஐயர் ஆக இருப்பேன்” என தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது;

“நான் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்ததால், கிரிக்கெட் மட்டுமே விளையாடுவேன் எனக் கூறி எனது பெற்றோர்களை சமாளிப்பது கடினம். நான் நன்றாக படிப்பேன். எனது பெற்றோர்கள் நான் விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் என விரும்பினர். மத்தியப் பிரதேச அணிக்கு புதிதாக எந்த ஒரு வீரர் வந்தாலும், நீங்கள் படிக்கிறீர்களா? என கேட்பேன்.

என்னால் ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களைச் செய்ய முடிந்தால், நான் செய்வேன். படிப்பும் களத்தில் சிறந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது. கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் அறிவை மட்டுமல்ல, பொது அறிவையும் கற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் பட்டப்படிப்பு அல்லது முதுகலை பட்டப்படிப்பை முடிக்க முடிந்தால், நீங்கள் அதை கண்டிப்பாக செய்ய வேண்டும், நான் தற்போது எனது பிஎச்டி படித்து வருகிறேன்.

நாம் உயிருடன் இருக்கும் வரை படிப்புகள் நம்முடன் இருக்கும். 60 வயது வரை எங்களால் விளையாட முடியாது. கிரிக்கெட் என்பது குறுகிய காலத்திற்கு மட்டுமே என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு வாழ்க்கையில் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் படிப்பு அவசியம். படிப்பின் காரணமாக சில காலம் கிரிக்கெட்டில் இருந்து விலகுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post நீங்கள் உயிரிழக்கும் வரை கல்வி உங்களுடனே இருக்கும்: கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் appeared first on Dinakaran.

Related Stories: