ஐசிசி வழங்கும் பிப்ரவரி மாதத்திற்கான Player Of The Month விருதுக்கு 3 வீரர்கள் பரிந்துரை!

ஐசிசி வழங்கும் பிப்ரவரி மாதத்திற்கான Player Of The Month விருதுக்கு பாகிஸ்தானின் சஹிப்சடா ஃபர்ஹான், இங்கிலாந்தின் வில் ஜேக்ஸ், அமெரிக்காவின் ஷாட்லி வான் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

நடந்து முடிந்த 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பைத் தொடர், கிரிக்கெட் வரலாற்றில் பல புதிய மைல்கற்களை எட்டியுள்ளது. இத்தொடரில் பாகிஸ்தான் அணியின் வலது கை தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்ஸாதா ஃபர்ஹான் பேட்டிங்கில் விஸ்வரூபம் எடுத்தார். பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற போட்டிகளில் அபாரமாக விளையாடிய அவர், ஒரு டி20 உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற விராட் கோலியின் 12 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.

2014-ல் கோலி எடுத்த 319 ரன்களைக் கடந்து, ஃபர்ஹான் 383 ரன்களைக் குவித்து புதிய உலக சாதனை படைத்தார். 76.60 என்ற சராசரியிலும், 160.25 என்ற சிறப்பான ஸ்டிரைக் ரேட்டிலும் ரன்களைச் சேர்த்த அவர், நமீபியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக இரண்டு சதங்களை விளாசினார். இதன் மூலம் ஒரு உலகக் கோப்பைத் தொடரில் இரண்டு சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். இவரது அதிரடியால் பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

இங்கிலாந்து அணி அரைஇறுதி வரை முன்னேறுவதற்கு அந்த அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் வில் ஜாக்ஸ் தூணாக விளங்கினார். பேட்டிங்கில் 194 ரன்களை 173.21 என்ற அதிரடி வேகத்தில் சேர்த்ததுடன், பந்துவீச்சிலும் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். குறிப்பாக, ஒரே உலகக் கோப்பைத் தொடரில் 4 முறை ‘ஆட்டநாயகன்’ விருதுகளை வென்ற முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை 27 வயதான ஜாக்ஸ் நிகழ்த்தினார். சூப்பர் 8 சுற்றில் இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான இக்கட்டான போட்டிகளில் அவர் வெளிப்படுத்திய ஆட்டம், இங்கிலாந்து அணி தனது பிரிவில் முதலிடம் பிடிக்க உதவியது.

மறுபுறம், பந்துவீச்சில் அமெரிக்க அணியின் ஷாட்லி வான் ஷால்க்விக் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். தொடக்கம் முதலே விக்கெட்டுகளை வீழ்த்துவதில் குறியாக இருந்த இவர், இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். பின்னர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் அதே போன்ற துல்லியமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 25 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஒட்டுமொத்தமாக இத்தொடரில் 13 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், 7.76 என்ற சிக்கனமான எகானமியுடன் பந்துவீசி இத்தொடரின் டாப் விக்கெட் டேக்கர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

Related Stories: