ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சாம்பியன் ஆக்குவதே எனது லட்சியம்: வைபவ் சூர்யவன்ஷி!

டெல்லி: இந்திய கிரிக்கெட்டின் இளம்புயல் வைபவ் சூர்யவன்ஷி, வரவிருக்கும் ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சாம்பியன் ஆக்குவதையே தனது முதன்மை லட்சியமாகக் கொண்டுள்ளார். மிக இளம் வயதிலேயே தனது வெறித்தனமான பேட்டிங் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த அவர், அண்மையில் நடைபெற்ற பிசிசிஐ நமன் விருதுகள் 2026 விழாவில் தனது கனவு குறித்துப் பேசினார். ஐபிஎல் போன்ற பிரம்மாண்ட மேடையில் ஒவ்வொரு வீரரும் கோப்பையை ஏந்தவே விரும்புவார்கள் என்றும், தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணிக்கு அதிக பங்களிப்பை வழங்கி இந்த முறை நிச்சயம் கோப்பையை வெல்லப்போவதாகவும் அவர் மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

சூர்யவன்ஷி 2025 ஐபிஎல் தொடரில் தனது அபார திறமையை வெளிப்படுத்தி, அந்தத் தொடரின் மிக இளம் வயதில் சதம் விளாசிய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். இதுமட்டுமின்றி, ஐசிசி யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இவரது இந்த அதிரடி ஆட்டமே இந்தியா ஆறாவது முறையாக உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தது.

கடந்த 2024-ம் ஆண்டு வெறும் 13 வயதாக இருந்தபோதே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்கவுட்டிங் குழு இவரை அடையாளம் கண்டு 1.1 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் ஒப்பந்தம் பெற்ற மிக இளம் வயது வீரர்களில் ஒருவராக அவர் உருவெடுத்தார். அணியின் பயிற்சி முகாம்களில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டின் வழிகாட்டலும், சீனியர் வீரர்களுடன் செலவழித்த நேரமும் தனது ஆட்டத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல உதவியதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார். இந்த அனுபவங்கள் அனைத்தும் ஐபிஎல் 2026-ல் தனக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என வைபவ் சூர்யவன்ஷி நம்புகிறார்.

Related Stories: