மதுரை: துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரால் இடர்பாடு என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார். மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் போதைப்பொருட்கள் இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதின் தீங்கு குறித்த மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேரணியை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், இதுவரை இல்லாத வகையில் ஆசிரியர்களின் கோரிக்கைகளை முதல்வர் ஏற்று திறந்த மனதுடன், எந்தவொரு முறைகேடும் இல்லாத நிலையில், ஒளிவு மறைவற்ற வெளிப்படைத்தன்மையுடன் ஆசிரியர், பேராசிரியர்களுக்கு பணிமாறுதல் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
பின்னர் ‘பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடம் எப்போது நிரப்பப்படும்’ என நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘துணைவேந்தர்கள் நியமனத்தை பொறுத்தவரை ஆளுநராலும், ஒன்றிய அரசாலும் எந்த வகையில் தமிழ்நாடு அரசுக்கு இடர்பாடு ஏற்படுகிறது என்பது எங்களை விட உங்களுக்கு நன்றாகத் தெரியும். சுமுகமான முடிவெடுத்து மாநில உரிமையை பேணி காக்க வேண்டும். அதன்படி அந்த பணிகள் எல்லாம் விரைவில் முடியும். மாநிலத்தில் ஆசிரியர், மாணவர்கள் நலன் பேணிக்காக்க வேண்டும் என்பதில் முதல்வர் கவனமாக இருந்து வருகிறார்’’ என்றார்.
The post துணைவேந்தர் நியமனத்தில் தமிழக ஆளுநரால் இடர்பாடு: உயர்கல்வித்துறை அமைச்சர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.