இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் பேசியதாவது, முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு சார்பாக, கடலூர் மாவட்டத்தில் இன்று இந்த அரசு நிகழ்ச்சியின் மூலம் 12 ஆயிரம் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். கடந்த 3 நாட்களாக ஏராளமான நிகழ்ச்சிகள். திருச்சி மாவட்டத்தில் ஆரம்பித்து துறையூரில் தொடங்கி, நாகை, சீர்காழி போன்ற இடங்களில் நடைபெற்ற அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் எல்லாம் பங்கேற்றுவிட்டு இன்றைக்கு கடலூருக்கு வந்து சேர்ந்திருக்கின்றேன்.
கடலூருக்கு பல முறை வந்திருக்கின்றேன். அண்ணன் எம்.ஆர்.கே அமைச்சர் சொன்னதுபோல, பல முறை வந்திருக்கின்றேன். பிரச்சாரம், கழக நிகழ்ச்சி, அரசு நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினராக வந்திருக்கின்றேன். விளையாட்டுத் துறை அமைச்சராக வந்திருக்கின்றேன். ஆனால், முதல் முறையாக துணை முதலமைச்சராக பொறுப்பேற்று உங்களை எல்லாம் சந்தித்து, உங்களுடைய வாழ்த்துகளை பெறுவதற்கு நான் இங்கு வந்திருக்கின்றேன். திராவிட மாடல் என்று சொன்னாலே எல்லாருக்கும் எல்லாம் என்று தான் அர்த்தம். அதன் அடிப்படையில் இந்த நிகழ்ச்சிக் கூட ஒரு திராவிட மாடல் நிகழ்ச்சி என்று சொல்லலாம்.
ஏனென்றால், இங்கே எல்லாருக்கும் எல்லாம் அனைத்து திட்டங்களும் கொடுக்கப்படுகிறது. கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டம் மூலம், கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் 33 வகையான ஸ்போர்ட்ஸ் கிட் உபகரணங்கள் கொடுக்கப்படுகிறது. மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 10 ஆயிரம் சகோதரிகளுக்கு 72 கோடி ரூபாய் மதிப்பில் வங்கி கடன் இணைப்புகள், ஆயிரத்துக்கு அதிகமானவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா, விவசாயிகள், தொழில் முனைவோர்கள், மாற்றுத்திறனாளிகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தோர் என அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் கொண்டு போய் சேர்க்கப்படுகிறது.
இப்படி யார் யாருக்கு என்னென்ன தேவை என்பதை பார்த்து பார்த்து நிறைவேற்றுவதுதான் நம்முடைய திராவிட மாடல் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் நம்முடைய திராவிட மாடல் அரசு என்பதை நீங்கள் மறந்துவிட முடியாது. இங்கே நலத்திட்டங்களை பெறுகிற அத்தனைப் பேருக்கும் முதலில் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் விளையாட்டுத்துறையில் திறமையாளர்களை உருவாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தான் கலைஞர் பெயரில் கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸ் என்ற திட்டத்தை சென்ற வருடம் ஆரம்பித்தோம்.
இதுவரைக்கும் சுமார் 30 மாவட்டங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் (Sports kids) கொடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான விளையாட்டு வீரர்கள், வீராங்கனையர் உருவாக்கியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு கூட, இந்த மேடையில் சர்வதேச அளவிலான கால்பந்து போட்டிகளில், இந்தியா சார்பாக பல்வேறு சாதனைகளை படைத்து வருகிற தங்கைகள் சந்தியா மற்றும் கார்த்திகா ஆகியோர் வருகை தந்திருக்கிறார்கள். அவர்கள் இரண்டு பேருக்கும் நம்முடைய அனைவரின் சார்பாக, நம்முடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வோம்.
SAFF Championship, South Asian Games, – 27th Senior Women National Championship ஆகிய போட்டிகளில் கோப்பையை வென்று இந்திய அணியில் தமிழ்நாட்டு அணியில் சிறப்பாக விளையாடியவர் தங்கை சந்தியா. Turkish women”s cup, 28th Senior Women”s National Football Championship, 27th Senior Women National Championship, Khelo India India-inter University Championship, All India Inter-University Football Championship உள்ளிட்ட பல்வேறு சர்வதேச தேசிய கால்பந்து போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற அணியில் சிறப்பாக விளையாடியவர் தங்கை கார்த்திகா .
கடலூர் மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் விளையாட்டுத்துறையில் சாதிக்க துடிக்கும் அத்தனை மகளிருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக, role model-ஆக இருக்கக்கூடிய இந்த இரண்டு தங்கைகளுக்கு நம்முடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் நாம் தெரிவித்துக் கொள்வோம். அவர்களின் முன்பாக இங்கே விளையாட்டு உபகரணங்களை நாம் கொடுக்க இருக்கின்றோம். கலைஞர் பெயரில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் செயல்படுத்தப்படுகிற முதல் திட்டம், இந்தத் திட்டத்திற்கு முதன்முறையாக கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டம் தான் என்று பெயர் வைத்தோம்.
நீங்கள் கூட யோசிக்கலாம். எதற்கு ஒரு ஸ்போர்ட்ஸ் திட்டத்திற்கு கலைஞருடைய பெயர் வைக்கிறோம். ஏனென்றால், கலைஞரிடம் இருந்த அந்த விடாமுயற்சி, திட்டமிடல், மன உறுதி உள்ளிட்ட அத்தனை குணங்களும் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் இருக்க வேண்டும் என்று தான் கலைஞரின் பெயரை வைத்தோம். இங்கே நிறைய மகளிர் வந்திருக்கிறீர்கள். கடலூர் மகளிரை பொறுத்தவரை உழைப்புக்கு பேர் போனவர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு சார்பாக, ரூ.71 கோடி அளவுக்கு வங்கி கடன் இணைப்பையும் இங்கே வழங்க இருக்கின்றோம்.
இதனை நம்முடைய முதலமைச்சர் கொடுக்கக்கூடிய வெறும் கடன் தொகையாக பார்க்கவில்லை. உங்கள் உழைப்பின் மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை தொகையாக முதலமைச்சர் பார்க்கின்றார்கள். இந்த கடன் இணைப்பின் மூலம், சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் நீங்கள் வாழ்வில் இன்னும் பல உயரங்களை தொட எங்களுடைய அன்பையும், வாழ்த்தையும் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். அதே போல, இங்கே 1,000 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்க இருக்கின்றோம்.
வீடு எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் வீட்டு மனை பட்டா. உங்கள் இடத்துக்கான பட்டா என்பது, உங்களுடைய சட்டப்பூர்வ உரிமை. அந்த உரிமையை நிலைநாட்டுகின்ற விதமாக, உங்களுக்கு இன்று இந்த நிகழ்ச்சியில் பட்டா வழங்க இருக்கின்றோம். அதற்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவையான திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் பார்த்து, பார்த்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
முக்கியமாக, இந்தியாவே திரும்பி பார்க்கின்ற வகையில், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதன்முதலில் நம்முடைய தமிழ்நாட்டில் தான் நம்முடைய முதலமைச்சர் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் திட்டத்தை அறிவித்தார்கள். அதை சென்ற வருடம் செயல்படுத்தினார்கள். ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு முழுக்க ஒரு கோடியே 16 லட்சம் மகளிர் மாதம் 1,000 ரூபாய் கலைஞர் மகளிர் திட்டம் மூலம் பயனடைகிறார்கள். இந்த கடலூர் மாவட்டத்தில் மட்டும் ஐந்து லட்சம் மகளிர் இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெற்று வந்து கொண்டிருக்கிறார்கள்.
அதுபோல, கடலூர் மாவட்டத்தில் விடியல் பயணம் திட்டம், கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தின் கீழ் இதுவரைக்கும் 17 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டிருக்கிறீர்கள். ஒரு, ஒரு மகளிரும் இந்த விடியல் பயணத் திட்டத்தின் மூலம் மாதம் ரூபாய் 900-லிருந்து 1,000 ரூபாய் வரைக்கும் சேமிக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், பெண்கள் படிப்பதற்கு புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் மூலம் 21ஆயிரம் மாணவ, மாணவியர் கடலூர் மாவட்டத்தில் மட்டும் மாதம் 1,000 ரூபாய் கல்வி உதவித்தொகை பெற்று வருகின்றார்கள்.
mJnghy, கடலூர் மாவட்டத்தில் மட்டும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழகம் முழுவதும் 20 லட்சம் குழந்தைகள் இதில் பயன் பெறுகிறார்கள். இந்த கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 58 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் தினமும் பயனடைந்து வருகின்றார்கள். இந்த திட்டங்கள் எல்லாம் உங்களுடைய வாழ்வை மேலும் மேலும் ஒளிமயமாக்காட்டும். கடலூர் மாவட்டத்தில் விளையாட்டு மேம்பாட்டிற்காகவும், விளையாட்டு கட்டமைப்புக்காகவும் ஏராளமான நடவடிக்கைகளை நம்முடைய திராவிட மாடல் அரசு எடுத்து வருகின்றது.
இங்கே இருக்கிற அண்ணா ஸ்டேடியத்தை மேம்படுத்த ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் அளவில் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. விருத்தாச்சலத்தில் உள்ள மினி ஸ்டேடியத்தில் கேலரியை மேம்படுத்துவது பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை 18 லட்சம் ரூபாய் அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரூபாய் 18 லட்சம் செலவில் SDAT விளையாட்டு விடுதி மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் உங்களுடைய வேண்டுகோளை ஏற்று ஒரு முக்கியமான அறிவிப்பை இங்கே வெளியிட இருக்கின்றேன்.
பேரறிஞர் அண்ணாவால் 1968-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, கலைஞரால் 1975-ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா ஸ்டேடியம் விரைவில் பொன்விழா காண உள்ளது. பல சர்வதேச – தேசிய அளவிலான வீரர்களை உருவாக்கிய அண்ணா ஸ்டேடியத்தில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் செயற்கை இழை ஓடுதளம் – Artificial Fibre Synthetic Track அமைக்கப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் உத்தரவின் பேரில், அவருடைய அனுமதியோடு, அவருடைய வழிகாட்டுதலின்படி உங்களுடைய கோரிக்கையை ஏற்று இங்கே அறிவிக்கின்றேன்.
அதில் மகிழ்ச்சி அடைகின்றேன். நீங்களும் மகிழ்ச்சி அடைவீர்கள் என்று நம்புகிறேன். இங்கே விளையாட்டு உபகரணங்களை பெற்றுள்ள இளைஞர்கள், அதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று மீண்டும் நான் உங்களை எல்லாம் கேட்டுக் கொள்கின்றேன். விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், தொழில்முனைவோர் என இங்கே அனைத்து நலத்திட்ட உதவிகளை பெற்றுள்ள அத்தனை பயனாளிகளுக்கும் மீண்டும் என்னுடைய அன்பையும், வாழ்த்தையும் தெரிவித்து வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.
இவ்வாறு துணை முதலமைச்சர் பேசினார். பின்னர், துணை முதலமைச்சர் 683 ஊராட்சிகளுக்கும், 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 835 தொகுப்புகளை கொண்டு செல்லும் வாகனத்தை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.விஷ்ணு பிரசாத், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.ஐயப்பன், சபா.இராஜேந்திரன்,
எம்.ஆர்.இராதாகிருஷ்ணன், ம.சிந்தனைசெல்வன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., மேயர் சுந்தரிராஜா, மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி இ.ஆ.ப.,துணை மேயர் பா.தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ரூ.15.08 கோடி மதிப்பில் செயற்கை இழையிலான தடகள ஓடுதளப் பாதை அமைக்கப்படும்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.