மதுரை: எஸ்ஐ தேர்வை ரத்து செய்யக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்த ஐகோர்ட் கிளை, எதிர்காலத்தில் பிரதான தேர்வில் தமிழ் வினாக்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டுமென பரிந்துரைத்துள்ளது. தென்காசியைச் சேர்ந்த குருசாமி, ஆனந்தராஜா ஆகியோர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு, தமிழ்நாடு காவல் துறையில் காலியாகவுள்ள 299 எஸ்ஐ பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த டிச.21ல் நடந்தது. பிரிவு ‘பி’ பகுதியில் உள்ள பாடத்திட்டத்தில் குறிப்பிட்டபடி தமிழ் வினாக்கள் இல்லை. அதற்கு பதிலாக உளவியல் பகுதியில் இருந்து 10 வினாக்கள் கூடுதலாக கேட்கப்பட்டுள்ளன. இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே, எஸ்ஐ தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தும், தேர்வை ரத்து செய்து புதிதாக தேர்வு நடத்துமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தனர்.
இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘தேர்வின் பகுதி-1ல் நடத்தப்பட்ட தமிழ் மொழி தகுதித்தேர்வில் தமிழ் மொழிக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வர்களின் தமிழ் மொழி அறிவு மற்றும் தேர்ச்சி ஏற்கனவே சோதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறை துணைப்பணி விதிகள், 70 மதிப்பெண்களுக்கு மட்டுமே எழுத்துத்தேர்வை நடத்த பரிந்துரைக்கின்றன. விரிவான பாடத்திட்டத்தையும் கட்டாயப்படுத்தவில்லை. ஒவ்வொரு நிலையிலிருந்தும் கேள்விகளைச் சேர்க்க வேண்டும் எனவும் இல்லை. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளின் பயனுள்ள பயன்பாடு ‘சோதிக்கப்படும்’ என்று மட்டுமே பாடத்திட்டம் வழங்கப்பட்டது. பாடத்திட்டத்தின் கட்டமைப்பிற்குள் குறிப்பிட்ட வகை கேள்விகளைச் சேர்ப்பது அல்லது விலக்குவது ஆட்சேர்ப்பு அதிகாரியின் விருப்பத்திற்கு உட்பட்டது, எனவே, தற்போதைய வழக்கில் சட்டபூர்வமாக எதையும் எதிர்பார்க்க முடியாது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: எஸ்ஐ நியமனத்திற்கு கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வுகளில் பின்பற்றப்பட்ட முறையே தற்போது பின்பற்றப்படும் என அறிவிக்கப்படவில்லை. பாடத்திட்டங்களை முடிவு செய்வது என்பது தேர்வாணையத்தின் விருப்பத்துக்கு உட்பட்டது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் முந்தைய முறையே பின்பற்றப்படும் என எதிர்பார்க்கக்கூடாது. இந்தத் தேர்வில் தமிழ் மொழியிலிருந்து குறிப்பிட்ட கேள்விகள் வினாத்தாளில் சேர்க்கப்படவில்லை என்றாலும் மாற்றப்பட்ட கேள்விகள் தேர்வாணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டத்திற்குள் இடம் பெற்றுள்ளது.
பகுதி பி-ல் கேட்கப்பட்ட உளவியல் கேள்விகள், பாடத்திட்டத்தில் இல்லை என மனுதாரர்கள் கூறுகின்றனர். தேர்வு எழுத செல்வோர் அனைத்து வினாக்களுக்கும் பதிலளிக்கும் வகையில் தயாராக வேண்டும். இந்த நியமனத்தில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை ஆதரிப்பதே இந்தக் கொள்கையின் நோக்கமாகும். இந்த நோக்கத்தை நிறைவேற்ற எதிர்காலத்தில் பிரதான தேர்வில் தமிழ் வினாக்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். இந்த பரிந்துரையை எதிர்காலத்தில் வினாத்தாள் தயாரிக்கும் போது கருத்தில் கொள்ளப்படும் என நீதிமன்றம் நம்புகிறது. எனவே, இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
