புகை மண்டலமானது டெல்லியில் காற்று மாசு; கட்டிட பணிக்கு தடை: வாகனங்கள் இயக்க கட்டுப்பாடு

புதுடெல்லி: டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்ததால் அங்கு கட்டிட பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பஸ் மற்றும் வாகனங்கள் இயக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு டெல்லியில் காற்று தரம் மிகவும் மோசம் அடைந்து வருகிறது. இந்த சீசனில் முதல் முறையாக டெல்லியின் காற்றின் தரம் நேற்று கடுமையானதாக மாறியது. காலை 9 மணியளவில் காற்றின் தரக்குறியீடு 428 ஆக இருந்தது. டெல்லி முழுவதும் அடர்ந்த புகை மூட்டம் காணப்பட்டது.

இதனால் முதியவர்கள், குழந்தைகள் சுவாசிக்க சிரமப்பட்டனர். இதை தொடர்ந்து டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த செயல்திட்டம் 3 அமல்படுத்தப்பட்டது. காற்றின் தரம் கடுமை நிலையை (401 முதல் 450 வரை) அடையும் போது செயல்படுத்தப்படும் மாசு எதிர்ப்பு நடவடிக்கை ஆகும். இந்த திட்டத்தின் கீழ் டெல்லியில் கட்டுமான பணிகள் மற்றும் கட்டிட இடிப்பு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சில பொது உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு உண்டு.

அதே போல் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளான குருகிராம், பரிதாபாத், காசியாபாத், நொய்டாவில் பிஎஸ் 3 பெட்ரோல், பிஎஸ் 4 டீசல் நான்கு சக்கர வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டது. கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் இயக்கத்திற்கும் இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். வெளியே செல்வது அவசியமானால், என்95 முககவசம் அணிய அறிவுத்தப்பட்டுள்ளது.

கேஸ் சேம்பருக்குள் நுழைவது போல் உள்ளது
வயநாடு மக்களவை இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் டெல்லி சென்ற காங்கிரஸ் பொதுச்ெசயலாளர் பிரியங்கா காந்தி, காற்று மாசுபாடு குறித்து தனது எக்ஸ் பதிவில்,’ காற்று தரம் 35 உள்ள வயநாட்டில் இருந்து டெல்லிக்கு திரும்பி வருவது எரிவாயு அறைக்குள் நுழைவது போல் இருந்தது. வானில் இருந்து பார்க்கும் போது புகை மூட்டம் இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது. குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கு சுவாசிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது. அதற்கு ஏதாவது செய்யுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

5ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்பு
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு அளவைக் கருத்தில் கொண்டு, எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளும் ஆன்லைன் மூலம் பாடம் நடத்த வேண்டும் என்று முதல்வர் அடிசி அறிவித்தாா்.

The post புகை மண்டலமானது டெல்லியில் காற்று மாசு; கட்டிட பணிக்கு தடை: வாகனங்கள் இயக்க கட்டுப்பாடு appeared first on Dinakaran.

Related Stories: