சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஓய்வூதியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்பு குழு சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அச்சங்கத்தின் தலைவர் மோகன் நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றியஅரசு சுகாதார திட்டம் மேம்படுத்தப்பட்டு, விரிவுபடுத்தப்பட்டு சிறப்பான மருத்துவ சேவை வழங்க வேண்டும். சிஜிஎச்எஸ் வசதி இல்லாத பகுதிகளில் மருத்துவப்படி ரூ3000மாக உயர்த்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் வழங்க வேண்டும்.
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு எட்டாவது ஊதியக்குழு உடனடியாக அமைக்கப்பட வேண்டும். பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கு 15சதவீதம் பிட்மெட் சலுகையுடன் ஓய்வூதியம் உயர்த்தப்பட வேண்டும். ரயில் பயணத்தில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளின் தீர்வுக்காக பல போராட்டங்களை நாங்கள் நடத்தியுள்ளோம். எங்கள் கூட்டமைப்பில் ஒன்றிய அரசு, பிஎஸ்என்எல் வங்கி உள்ளிட்ட பல ஓய்வூதியர் சங்கங்கள் இணைந்துள்ளன. அடுத்த கட்டமாக, வரும் 13ம் தேதி டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரடியாக சந்தித்தும் ஆதரவு கோரியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் டெல்லியில் வரும் 13ம் தேதி தர்ணா: ஓய்வூதியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு appeared first on Dinakaran.