சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: தமிழ்நாட்டில் போக்குவரத்துத் துறைக்கு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 45 பேரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித்தேர்வு அறிவிக்கையை டிஎன்பிஎஸ்சி அறிவித்திருக்கிறது. அப்பணிக்கான போட்டித் தேர்வு வரும் 9ம் தேதி நடத்தப்படவிருக்கும் நிலையில், 6 ஆண்டுகளுக்கு முன் இதே பணிக்காக நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளின் முடிவுகளை வெளியிட டி.என்.பி.எஸ்.சி எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
110 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகளை வெளியிடாமல் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர்களை தேர்வு செய்வது பல சிக்கல்களை உருவாக்கும். 6 ஆண்டுகளுக்கு முன் தேர்வு எழுதியவர்கள் பணியில் அமர்த்தப்படாமல், புதிதாக தேர்வு செய்யப்படுபவர்கள் பணியமர்த்தப்பட்டால் யாருக்கு பணிமூப்பு வழங்குவது என்பதில் குழப்பம் உண்டாகும். எனவே புதியவர்களை நியமிக்கும் முன்பாக 2018ம் ஆண்டில் நடத்தப்பட்ட 110 பேரை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
The post மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வு முடிவுகளை அறிவிக்க ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.