அதன்படி இந்த ஏரியின் 3ம் எண் மதகு (ராமர் மதகு) கடந்த ஆண்டு பருவமழையின் போது, மிகவும் பாதிக்கப்பட்டு உடைந்த நிலையில் காணப்பட்டது. இம்மதகினை சீர் செய்ய ₹30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மதகினை சீர் செய்யும் பணி நடைபெற்று முடிவடைந்தது. மேலும் கூடுதலாக கதவணை பொருத்தும் பணியும் தொடங்கி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த கதவணையில் அதிகபட்சமாக 25 முதல் 30 கன அடி வரை தண்ணீரை வெளியேற்றலாம். மேலும், கடந்த ஆண்டு பருவமழையின் போது, திருநின்றவூர் ஏரியிலிருந்து உபரிநீரை வெளியேற்ற முடியாமல், ஏரியினை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. தற்போது 3ம் எண் மதகினை சீரமைத்து கதவணை பொருத்தியதன் மூலம் வெள்ள காலங்களில் உபரி நீரை சுலபமாக வெளியேற்ற ஏதுவாக இருக்கும்.
அதுமட்டுமல்லாமல், விவசாய பயன்பாட்டிற்காக இந்த மதகில் அதற்கான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த வருடம் பருவமழைக்கு முன்னதாக பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளுக்காக ₹20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, மதகு எண் 3லிருந்து செல்லும் கால்வாயினை தூர்வாரி சுத்தம் செய்யும் பணி 5 கி.மீ. நீளத்திற்கும், மதகு எண் 4லிருந்து செல்லும் கால்வாயினை தூர்வாரி சுத்தம் செய்யும் பணி 2 கி.மீ. நீளத்திற்கும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால், வெள்ள காலங்களில் மழைநீர் தங்குதடையின்றி செல்ல ஏதுவாக இருக்கும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post திருநின்றவூர் ஏரியில் ₹50 லட்சம் மதிப்பில் மதகுகளை சீரமைத்து, கால்வாய் சுத்தம் செய்யும் பணி தீவிரம்: நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.