கூடலூர் : பெரியாறு அணை தொடர்பான கேரள அரசியல் கட்சியினரின் சர்ச்சை பேச்சு விவகாரத்தை கண்டித்து குமுளியை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் சங்கத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால், தமிழக – கேரள எல்லையில் பதற்றம் நிலவியது.கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் கடந்த 15ம் தேதி முக்கிய அரசியல் கட்சியினர், அமைப்பினர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில், பெரியாறு அணையை அகற்றி விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என வலியுறுத்திப் பேசினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணை தொடர்பாக தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் கேரள அரசியல் கட்சியினர், அமைப்பினரைக் கண்டித்தும் குமுளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தமிழக விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று கூடலூர் அருகே லோயர் கேம்ப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து கேரள எல்லையை நோக்கி தமிழக விவசாய அமைப்பினர் ஊர்வலமாக சென்றனர்.
அவர்களை உத்தமபாளையம் டிஎஸ்பி செங்குட்டு வேலவன் தலைமையிலான போலீசார் லோயர் கேம்ப் காவல் சோதனைச் சாவடி அருகே தடுத்து நிறுத்தினர். அப்போது விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் சற்று நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் லோயர் கேம்ப் பென்னிகுக் நினைவு மணி மண்டபம் முன்பு அமர்ந்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட
னர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, பெரியாறு அணையில் 152 அடி வரை நீரை தேக்குவதற்கான தமிழகத்தின் உரிமைக்கு மாற்றாக 120 அடி வரை மட்டுமே நீரை தேக்க கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றம் சாட்டினர். போராட்டத்தில் பெரியாறு – வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், செயலாளர் பொன்.காட்சி கண்ணன் மற்றும் பல்வேறு விவசாயிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தால் தமிழக – கேரள எல்லைப்பகுதியில் நேற்று பதற்றம் நிலவியது.
ஒன்றிய பாஜ அரசு இரட்ைட வேடம்
பெரியாறு – வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பெரியாறு அணைக்காக எவ்வித தியாகமும் செய்வோம். பெரியாறு அணை ஐந்து மாவட்ட விவசாயிகள் மற்றும் மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளதால் அதற்காக அணையில் நமது உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது. தமிழக அரசு முனைப்போடு பெரியாறு அணைக்காக சட்டப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். மாநிலங்களவையிலும் பெரியாறு அணைக்காக குரல் கொடுக்க வேண்டும். ஒன்றிய பாஜ அரசு கேரள மாநிலத்தில் தனது அரசியல் நிலைப்பாட்டிற்காக பெரியாறு அணை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது’’ என்றார்.
The post பெரியாறு அணை விவகாரத்தில் தொடர் சர்ச்சைப் பேச்சு குமுளியை முற்றுகையிடக் கிளம்பிய தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்தம் appeared first on Dinakaran.