33வது டெஸ்ட் சதம் விளாசி இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் புதிய சாதனை

லார்ட்ஸ்: இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மான்செஸ்டரில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நிலையில் 2வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் டான் லாரன்ஸ் 9, கேப்டன் ஒல்லி போப் 1, பென் டக்கெட் 40 ரன்னில் வெளியேற ஜோ ரூட் 143 ரன் விளாசினார்.

பின்னர் வந்த ஹாரி புரூக் 33, ஜேமி ஸ்மித் 21, கிறிஸ்வோக்ஸ் 6 ரன்னில் அவுட் ஆகினர். நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 358 ரன் எடுத்திருந்தது. இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது. நேற்று ஜோ ரூட் டெஸ்ட்டில் தனது 33வது சதத்தை விளாசினார். இதன் மூலம் டெஸ்ட்டில் அதிக சதம் அடித்த இங்கிலாந்து வீரராக அலைஸ்டர் குக்கின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். குக் 161 டெஸ்ட்டில் 12,427 ரன்னுடன் அதிக ரன் குவித்த இங்கிலாந்து வீரராக உள்ளார். அவரை முந்த ரூட்டிற்கு 198 ரன்தான் தேவை.

மேலும் தற்போது கிரிக்கெட் ஆடி வரும் வீரர்களில் டெஸ்ட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சிறப்பையும் ரூட் பெற்றார். ஆஸ்திரேலியாவின் ஸ்மித், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் தலா 32 சதம் அடித்துள்ளனர். அவர்களை ஜோ ரூட் முந்தினார். மேலும் லார்ட்ஸ் மைதானத்தில் ரூட் 6வது சதத்தை பதிவு செய்தார். நேற்று ஆட்டம் முடிந்த பின்னர் ஜோரூட் கூறுகையில், நிஜமாகவே இன்று நல்ல நாள். தற்போது நல்ல நிலையில் இருக்கிறோம். 33 சதம் அடித்தது பெருமையாக இருக்கும். இன்னும் நிறைய கிரிக்கெட் விளையாட வேண்டும், என்றார்.

The post 33வது டெஸ்ட் சதம் விளாசி இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் புதிய சாதனை appeared first on Dinakaran.

Related Stories: