கிராமசபை கூட்டம் புறக்கணிப்பு உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபடும் பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினர் 20 பேர் கைது: ஏகனாபுரம் கிராமத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம், ஜூலை 4: ஏகனாபுரம் கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடத்தாமல் புறக்கணிப்பு செய்யப்பட்டதை கண்டித்து, தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினர் 20 பேரை, போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின் 2வது பசுமைவெளி விமான நிலையமானது, 13 கிராமங்களை உள்ளடக்கி, பரந்தூர் பகுதியிலே அமைக்கப்பட உள்ளது. இந்த, பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராம மக்கள் கிராம சபை கூட்டங்கள் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஆனாலும், தமிழக அரசானது நிலம் எடுப்பு அலுவலகங்கள் அமைத்து, பரந்தூர் விமான நிலையம் அமைக்க நில எடுப்பு பணிகளுக்காக தனி மாவட்ட வருவாய் அலுவலர் மூலமாக நிலத்தின் உரிமையாளர்களிடம், நில எடுப்பு சம்பந்தமாக ஆட்சேபனைகளும் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பாக பெரும்புதூரில் உள்ள 58 கிராமங்களில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், ஏகனாபுரம் கிராமத்தில் மட்டும் கிராம சபை கூட்டம் நடத்தாமல் புறக்கணிக்கப்பட்டது.

இதனால், ஏகனாபுரம் கிராம மக்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகினர். இதன், காரணமாக ஏகனாபுரம் கிராம மக்கள் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினர் தெரிவித்திருந்தனர். அதன்படி, ஏகனாபுரம் கிராமத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட போராட்ட குழுவினர் நேற்று அரசு பொது போக்குவரத்து பேருந்தில் பயணம் மேற்கொண்டு, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்ல இருந்த போராட்ட குழுவினரை, போலீசார் ஏகனாபுரம் கிராமத்திலேயே தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

அற வழியில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்த நிலையில், எதற்காக அங்கு செல்லும்போது கைது செய்கிறீர்கள் என கேட்டு போராட்டக்காரர்கள், போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, போலீசாருக்கு எதிராக கண்டன முழக்கங்களையும் எழுப்பினர். இதனையடுத்து, இருசக்கர வாகனம், தனியார் வாகனத்தில் பயணித்தால் காவல்துறையினரால் கைது நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள் என்பதற்காக, அரசு பொது போக்குவரத்து பேருந்தில் பயணித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள இடத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட இருந்த பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினர் 20 பேரை கைது செய்த போலீசார், சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

நிருபர்களை பணி செய்ய விடாமல் தடுப்பு
போராட்டக்காரர்களை கைது செய்வது குறித்து செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களை பணி செய்ய விடாமல் தடுத்து ஒருமையில் பேசி, உங்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தோமா என பெரும்புதூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் உதயகுமார், கேலி கிண்டல் செய்து கேட்ட நிலையில், செய்தியாளர்கள் இதுகுறித்து உபயோகமான விளக்கம் கேட்டபோது, நிருபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், நிருபர்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டிய காவல்துறை உயரதிகாரியின், அதிகார தோரணையான அலட்சியமான இத்தகைய பேச்சு போலீசாருக்கும், நிருபர்களுக்கும் இடையான நட்புறவை முறிப்பதாக கருத்து எழுந்துள்ளது.

The post கிராமசபை கூட்டம் புறக்கணிப்பு உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபடும் பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினர் 20 பேர் கைது: ஏகனாபுரம் கிராமத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: