அரசு பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஓட்டுநர், நடத்துனர் உட்பட 10 பயணிகள் படுகாயம்: செங்கல்பட்டு அருகே பரபரப்பு

செங்கல்பட்டு, ஜூலை 6: செங்கல்பட்டு அருகே அரசு பேருந்து, டெய்லர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர் உட்பட 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் வாகன நெரிசலும், பரபரப்பும் ஏற்பட்டது. திருவண்ணாமலையிலிருந்து அரசு பேருந்து ஒன்று நேற்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்தது. பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது சாலையை கடந்து செல்ல முயன்ற டெய்லர் லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் அரசு பேருந்து மற்றும் டெய்லர் லாரியின் முகப்பு பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் முன் இருக்கைகளில் அமர்ந்திருந்த பயணிகள் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் படுகாயமடைந்த பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாம்பரம் போக்குவரத்து போலீசார் விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். அரசுப் பேருந்து, டெய்லர் லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சிங்கபெருமாள் கோவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதால் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. இதையடுத்து, போலீசார் விபத்தில் சிக்கி சாலையின் நடுவே நின்றிருந்த அரசுப் பேருந்து மற்றும் டெய்லர் லாரி ஆகியவற்றை மீட்பு வாகனம் மூலமாக அப்புறப்படுத்தி வாகன போக்குவரத்தை சீர் செய்தனர். அதனைத்தொடர்ந்து, வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றன. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் 2 மணிநேரம் பரபரப்பு நிலவியது.

The post அரசு பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஓட்டுநர், நடத்துனர் உட்பட 10 பயணிகள் படுகாயம்: செங்கல்பட்டு அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: