கருப்படிதட்டடை ஊராட்சியில் மாட்டு தொழுவமாக மாறிய நூலகம்: நடவடிக்கை எடுக்க வாசகர்கள் கோரிக்கை

காஞ்சிபுரம்: கருப்படிதட்டடை ஊராட்சியில் உள்ள கிராம நூலகத்தின் முகப்பில், மாடுகளை கட்டி வைப்பதால், கழிவுகள் மற்றும் துர்நாற்றத்தால், நூலகத்திற்கு வருவதை வாசகர்கள் தவித்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் அருகே கருப்படிதட்டடை ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த, ஊராட்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், படித்தவர்கள் அதிகம் உள்ளனர். இதனால், கடந்த 2009-2010ம் ஆண்டு நூலக கட்டிடம் கட்டப்பட்டது.

இதில், அப்பகுதியை சேர்ந்த படித்தவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரும் பொது அறிவை வளர்த்துக்கொள்ளும் விதமாக தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள் ஆகிய எழுதிய நூல்களை, இந்த நூலகத்தில் படித்து வந்தனர்.
தற்போது, போட்டி தேர்வுகளுக்கான விழிப்புணர்வு அதிகரித்திருக்கும் நிலையில், நூலகம் சென்று பல்துறை புத்தகங்களை மாணவர்கள் படிக்க விரும்புகின்றனர். இந்நிலையில், கருப்படிதட்டடை ஊராட்சி நூலக முகப்பில், மாடுகளை கட்டி வைப்பதால் கழிவுகள் மற்றும் துர்நாற்றத்தால், நூலகத்திற்கு செல்வதை வாசகர்கள் தவிர்த்து வருகின்றனர். இதனால், நூலகம் தற்போது மாட்டு தொழுவமாக மாறியுள்ளது.

மேலும், நூலகத்தில் தினசரி நாளிதழ்கள், பொது அறிவு புத்தகங்களை அதிகரிக்க வேண்டும். மேலும், நூலகம் தொடங்கப்பட்டதில் இருந்து புதிதாக புத்தகங்கள் வாங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தற்போதைய, காலகட்டத்திற்கேற்ப மேம்படுத்தி புதிதாக புத்தகங்கள் வாங்க வேண்டும். சமீபத்திய தரவுகளுடனான பொது அறிவு புத்தகங்களை நூலகத்தில் அதிகப்படுத்த வேண்டும் என வாசகர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். எனவே, நூலக முகப்பில் மாடுகள் கட்டப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவும், நூலகத்தை முறையாக பராமரிக்கவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கருப்படிதட்டடை ஊராட்சியில் மாட்டு தொழுவமாக மாறிய நூலகம்: நடவடிக்கை எடுக்க வாசகர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: