சர்வதேச பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தையொட்டி திடக்கழிவு மேலாண்மை திட்ட பயிற்சி: கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

மாமல்லபுரம்: சர்வதேச பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தையொட்டி மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் நடைபெற்ற ஒருநாள் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பயிற்சியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். மாமல்லபுரம் பேரூராட்சி 15 வார்டுகளில், 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு, 4500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் 750க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன. பேரூராட்சியில் தினசரி 8.50 டன் கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. இதில், 5.50 டன் மக்கும் கழிவுகள், 3 டன் மக்காத கழிவுகள் என தரம் பிரிக்கப்படுகிறது. மக்கும் கழிவுகளை கொண்டு இயற்கை உரம், மண்புழு உரம், கலப்பு உரம் தயாரிக்கப்படுகிறது.

இதற்காக, இசிஆர் சாலையொட்டி உள்ள வளம் மீட்பு பூங்காவில் 100 மற்றும் 50 கன அடி கொண்ட பயோ கேஸ் பிளான்ட் அமைத்து பாதுகாப்பாக திடக்கழிவு மேலாண்மை திட்டம் தடையின்றி செயல்பட்டு வருகிறது. மேலும், நவீன கருவி மூலம் பிளாஸ்டிக் தூள் செய்யப்பட்டு, சாலை போடும் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு, பிரிக்க முடியாத கழிவுகளை திடக்கழிவு மேலாண்மை விதி 2016ன் படி சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வீடுகளிலிருந்து பெறப்படும் அபாயகரமான கழிவுகள் சானிடரி நாப்கின் இயந்திரம் மூலம் சாம்பலாக்கப்படுகிறது.

இந்நிலையில், சர்வதேச பிளாஸ்டிக் இல்லாத தினத்தையொட்டி இசிஆர் சாலைக்கு அருகே உள்ள வளம் மீட்பு பூங்காவில் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என திருக்கழுக்குன்றம் அருகே கொத்திமங்கலம் பகுதியில் இயங்கும் தொன் போஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் 75 பேரை அழைத்து வந்து நேற்று ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை எவ்வாறு தரம் பிரிப்பது, மண்புழு உரம், கலப்பு உரம் தயாரிப்பது, விவசாயம் மற்றும் செடி, கொடிகளுக்கு உரத்தை எவ்வாறு பயன்படுத்துவது குறித்து மாமல்லபுரம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, மேற்பார்வையாளர் தாமோதரன் மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவன பணியாளர்கள் மாணவ – மாணவிகளுக்கு தெளிவாக விளக்கிக் கூறினர். அப்போது, எந்தெந்த பொருட்கள் மூலம் இயற்கை உரங்களை தயாரிக்கலாம் என மாணவர்கள் ஆர்வமாக கேட்டு தெரிந்து கொண்டனர்.

The post சர்வதேச பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தையொட்டி திடக்கழிவு மேலாண்மை திட்ட பயிற்சி: கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: