வாலாஜாபாத் பகுதிகளில் இறைச்சி கழிவுகள் கொட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை: பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பகுதிகளில் இறைச்சி கழிவுகள் கொட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரூராட்சி மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வாலாஜாபாத் பேரூராட்சி மன்ற கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் இல்லா மல்லிதர் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுரேஷ்குமார், செயல் அலுவலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் பேசுகையில்: பேரூராட்சியின் மூலம் நடத்தப்படும் இருசக்கர வாகன நிறுத்தும் இடத்தின் வரவு என்ன, அதை எவ்வாறு நிர்வாகம் செய்யப்படுகிறது. வாலாஜாபாத்தில் உள்ள 15 வார்டுகளிலும் உள்ள மின் கம்பங்களில் உள்ள மின் விளக்குகள் அதிக அளவிலான மின்கம்பங்களில் எரிவதில்லை, இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 15 வார்டுகளிலும் சீரான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உரங்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது, இதனை வார்டு வாரியாக செல்லும் தூய்மை பணியாளர்கள் மக்களிடம் உரங்கள் உள்ளன என துண்டு பிரசுரங்கள் மூலம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏனெனில், பல்வேறு வீடுகளில் மாடித்தோட்டம் அமைத்து பல்வேறு வகையான செடிகளை வளர்த்து வருகின்றனர். அவர்களுக்கு இதுபோன்ற உரங்கள் தேவைப்படும்’ என்றனர்.

இதேபோல், 15 வார்டுகளிலும் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகின்றன. இந்த குடிநீரில் குளோரின் கலந்து விநியோகிக்கப்படுகின்றனவா என குடிநீர் பராமரிப்பு பணியை செய்யும் பணியாளர்கள் கண்காணிக்க வேண்டும். வாலாஜாபாத் நகர் பகுதிகளில் பேரூராட்சிக்கு சொந்தமான கிணறுகள் இருந்தன. தற்போது, பல்வேறு கிணறுகள் பராமரிப்பின்றி மூடப்பட்டுள்ளது. இதுபோன்ற, கிணறுகள் பேரூராட்சியில் எங்கெங்குள்ளன என்பதை கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும். பேரூராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன.

இதனை கட்டுக்குள் கொண்டு வர பேரூராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.பேரூராட்சி நகர் பகுதியில் இறைச்சி கடைகள் அதிகம் உள்ளன. இந்த இறைச்சி கடைகள் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை இறைச்சி கடை உரிமையாளர்கள் இரவு நேரங்களில் பல்வேறு இடங்களில் சாலையோரம் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால், சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன. எனவே, சாலையோரம் இறைச்சி கழிவுகளை கொட்டிச்செல்லும் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், சமீபத்தில் தினகரன் நாளிதழில் நாய்கள் வாலாஜாபாத் நகர் பகுதியில் அதிகமாக சுற்றித்திரிகின்றன என செய்தி வெளியாகின.

இதனையடுத்து, நாய்களை பிடிக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், வாலாஜாபாத் நகர் பகுதியில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் உள்ளது. இந்த கால்நடைகள் மூலம் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது என இதே தினகரன் நாளிதழிலும் வெளியான இதற்கான நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். இதனைத்தொடர்ந்து, கூட்டத்தில் வாலாஜாபாத் நகர் பகுதியில் மின்தடை ஏற்படுகின்றன. இதனால், குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க புதிய ஜெனரேட்டர் வாங்குவது, நேரு நகர் அங்கன்வாடி மையத்திற்கு கழிவறை கட்டுவது, கங்கை விநாயகர் கோயில் தெருவில் மழைநீர் வடிகால்வாய் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post வாலாஜாபாத் பகுதிகளில் இறைச்சி கழிவுகள் கொட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை: பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: