புதுப்பாக்கம் கிராமத்தில் ₹1.60 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய் துறையினர் அதிரடி நடவடிக்கை

திருப்போரூர், ஜூலை 6: புதுப்பாக்கம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ₹1.60 கோடி மதிப்புள்ள 18 சென்ட் அரசு நிலத்தினை வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். கேளம்பாக்கத்தை அடுத்துள்ள புதுப்பாக்கம் கிராமத்தில் புல எண் 225/8ல் அடங்கிய பரப்பளவு சுமார் 18 சென்ட் நிலம் வண்டிப்பாதையாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த இடத்தை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்து மதிற்சுவர் அமைத்து இருப்பதாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரில் கூறப்பட்டுள்ள வண்டிப்பாதை குறித்து நேரில் ஆய்வு செய்யுமாறு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார். அதன்படி, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் கடந்த 2ம்தேதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து, வண்டிப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை அளித்தார். இந்த, அறிக்கையின்படி ஆக்கிரமிப்பை அகற்ற முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று வண்டலூர் வட்டாட்சியர் புஷ்பலதா, மாம்பாக்கம் வருவாய் ஆய்வாளர் முருகேசன், புதுப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையில், மதிற்சுவர் அகற்றப்பட்டு வண்டிப்பாதை நிலம் ஆக்கிரமிப்பு மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ₹1 கோடியே 60 லட்சம் என வருவாய்த்துறையின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post புதுப்பாக்கம் கிராமத்தில் ₹1.60 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய் துறையினர் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: