‘அக்னிவீர்’ வாயு தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு, ஜூலை 6: இந்திய விமானப்படையின் ‘அக்னிவீர்‘ வாயு தேர்விற்கு விண்ணபிக்கலாம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய விமானப் படையால் அக்னிவீர் வாயு தேர்வு இணையதளம் வாயிலாக வரும் அக்டோபர் மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வில் கலந்துகொள்வதற்கு இம்மாதம் 8ம் தேதி முதல் 28ம் தேதி வரை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இப்பதவிக்கு விண்ணப்பிக்க 2004ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி முதல் 2008 ஜனவரி மாதம் 3ம் தேதிக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். தேர்வு கட்டணம் ₹550. கல்வித்தகுதி, 12ம் வகுப்பு அல்லது மூன்று வருட பட்டய படிப்பு அல்லது தொழில் படிப்புகள். மேலும், பன்னிரெண்டாம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் பாடப்பிரிவுகளுடன் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது மூன்று வருட பட்டய படிப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இரண்டு வருட தொழிற்படிப்பு இயற்பியல் மற்றும் ஆங்கிலம் பாடப்பிரிவுகளுடன் 50 சதவீத மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அறிவியல் அல்லாத பாடப்பிரிவுகளில் 50 சதவீத மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தை பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம். தகுதியும் விருப்பமும் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் இத்தேர்விற்கு விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ‘அக்னிவீர்’ வாயு தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: