மேம்பால ரவுண்டானாவில் உரசியதில் லாரி டேங்க் சேதமடைந்து சாலையில் ஓடிய டீசல்

செங்கல்பட்டு, ஜூலை 4: செங்கல்பட்டில் மேம்பால ரவுண்டானாவில் லாரி உரசியதால் டேங்க் சேதமடைந்து சாலையில் டீசல் ஆறாக ஓடியது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து லாரி ஒன்று பெருட்களை ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டு அடுத்த திருப்போரூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு நேற்று முன்தினம் இரவு வந்தது. லாரியை ராணிப்பேட்டையை சேர்ந்த ஜெயகுமார் (58) என்பவர் ஓட்டி வந்தார். பின்னர், அங்கிருந்து ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு செல்ல செங்கல்பட்டு வல்லம் மேம்பாலத்தின் வழியாக ரவுண்டானாவை கடக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக ரவுண்டானாவின் பக்கவாட்டு பகுதியில் லாரியின் டீசல் டேங்க் உரசியது. இதில், டீசல் டேங்கு உடைந்து சேதமானதால் சுமார் 500 லிட்டர் டீசல் சாலையில் பரவியது.அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த செங்கல்பட்டு டவுன் போலீசார் ரவுண்டானா மீது உரசியபடி நின்ற லாரியை உடனடியாக அப்புறப்படுத்தினர். பின்னர், விபத்து ஏற்படாத வகையில், சாலையில் ஆறாக ஓடிய டீசலை 10க்கும் மேற்பட்ட போலீசார் சேர்ந்து சாலையில் மணலை கொட்டி சுத்தம் செய்து அகற்றினர்.

The post மேம்பால ரவுண்டானாவில் உரசியதில் லாரி டேங்க் சேதமடைந்து சாலையில் ஓடிய டீசல் appeared first on Dinakaran.

Related Stories: