தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் குழுக்கள் தயாரிப்பு பொருள்கள் விற்பனை

தஞ்சாவூர், ஜூலை 2: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவி குழுக்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்கள் தயாரிக்கும் பொருட்கள் சந்தைப்படுத்தும் விதமாகவும் மாதத்தின் முதல் திங்கட்கிழமை ஸ்டால்கள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. வாந்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறை தீர் கூட்டத்தின் போது தஞ்சை மாவட்ட மகளிர் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் விற்பனைககு வைக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமை, மகளிர் குழுக்களில் தயாரிக்கும் பொருட்களை அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வாங்கி பயனடைகின்றன. கடந்த மாதத்தில் 8 முதல் 10 ஸ்டால்கள் அமைக்கப்பட்ட நிலையில் நேற்று 20க்கும் மேற்பட்ட மகளிர் குழுக்களின் ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

இதில் மகளிர்குழு உறுப்பினர்கள் தயாரித்த ஹெல்த் மிக்ஸ், ஒயர் கூடை, கீ செயின்கள், தோடு, பொட்டு, மசாலா பொருட்கள், நெல்லிக்காய்ப்பொடி, சணல் பைகள் என ஏராளமான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இவற்றை பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

இது குறித்து மகளிர் திட்ட மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளர் செந்தில்குமார் கூறுகையில், மகளிர் சுய உதவி குழுவினர் தயாரிக்கும் பொருள்களை சந்தைப்படுத்தவும் விற்பனையை அதிகரிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் மகளிர் குழுக்களின் வருவாய் உயரும். கடந்த மாதத்தைவிட தற்போது ஸ்டால்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் குழுக்கள் தயாரிப்பு பொருள்கள் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: