மதுரவாயலில் பரபரப்பு அடுத்தடுத்து 4 கடைகளில் தீ விபத்து: 2 மணிநேரம் போராடி அணைப்பு

பூந்தமல்லி, ஜூலை 4: மதுரவாயலில் நேற்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அடுத்தடுத்து 4 கடைகள் எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மதுரவாயல் எம்எம்டிஏ காலனி மின்வாரிய அலுவலகம் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஓட்டல், டயர் கடை, சென்னை குடிநீர் வாரியத்தின் பிளாஸ்டிக் பைப் மற்றும் உதிரி பாகங்கள் வைத்திருக்கும் குடோன் மற்றும் கார் ஷெட் ஆகியவை என அடுத்தடுத்து 4 கடைகள் உள்ளன. இந்நிலையில், நேற்று காலை இங்குள்ள பிளாஸ்டிக் பைப் குடோனில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மதுரவாயல் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். மதுரவாயல் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் குடோனில் பற்றிய தீ அருகே இருந்த ஓட்டல், டயர் கடை மற்றும் கார் ஷெட் ஆகியவற்றுக்கும் பரவியது. மளமளவென பற்றி எரிந்த தீயால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம் சூழ்ந்தது.

இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க கூடுதலாக பூந்தமல்லி, கீழ்ப்பாக்கம், விருகம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து வந்து கார் ஷெட்டில் இருந்த 15 கார்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். மேலும், அவ்வழியே வாகன போக்குவரத்திற்கு தடை விதித்து தீயணைப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர். அப்போது, டயர் கடையில் இருந்த பொருட்கள் வெடித்து சிதறியதால் தீயணைப்பு பணியில் சிறிது தாமதம் ஏற்பட்டது. மேலும், அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மேற்கொண்டனர். சுமார் 2 மணிநேரம் போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர். தீ விபத்து குறித்து மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர். அடுத்தடுத்து 4 கடைகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post மதுரவாயலில் பரபரப்பு அடுத்தடுத்து 4 கடைகளில் தீ விபத்து: 2 மணிநேரம் போராடி அணைப்பு appeared first on Dinakaran.

Related Stories: