பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

தண்டையார்பேட்டை, ஜூலை 4: ரயில்வே நடைமேடையில் கடை வைக்க அனுமதி வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி செய்த விவகாரத்தில் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தமிழகத்தில் சமீபகாலமாகவே, தேசிய கட்சியான பாஜவை சேர்ந்த மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். மேலும், பல மோசடிகளிலும் ஈடுபட்டு வருவது அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்தில் இரண்டு மாதங்களில் ரூ.167 கோடி மதிப்புள்ள 267 கிலோ தங்கம் கடத்திய பாஜ பிரமுகரும், யூடியூபருமான பிரித்வீ உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர் பிரதமர் மோடி, மாநில தலைவர் அண்ணாமலை, ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், சென்னையில் ரயில்வே நடைமேடையில் கடை வைக்க அனுமதி பெற்று தருவதாக ரூ.2.50 லட்சம் மோசடி செய்த மற்றொரு பாஜ நிர்வாகி சிக்கியுள்ளார்.

இதுபற்றிய விவரம் வருமாறு: தண்டையார்பேட்டை நேதாஜி நகர், மெயின் தெருவைச் சேர்ந்தவர் ராமராஜன் (48), காயலான்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி நவமணி (45). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் தனது தோழி சுமதி மூலம் தண்டையார்பேட்டை நெடுஞ்செழியன் நகரைச் சேர்ந்த எஸ்.ஆர்.செந்தில்குமார் (52) என்பவர் நவமணிக்கு அறிமுகமானார். இவர், வடசென்னை மாவட்ட பாஜ செயலாளராகவும், ரயில்வே நிர்வாக குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். கொருக்குப்பேட்டை ரயில் நிலைய நடைமேடையில் நவமணிக்கு கடை அமைத்து தருவதாகக் கூறி, அவரிடம் செந்தில்குமார் கடந்த 2018ம் ஆண்டு ₹2,50,000 வாங்கியுள்ளார். அதன்பேரில் கொரட்டூர் ரயில் நிலையத்தில் கடை நடத்த நவமணியிடம் அவர் அனுமதி கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் 2 மாதங்களில் அனுமதி முடிந்து விட்டதாகக் கூறி ரயில்வே நிர்வாகம் கடையை காலி செய்ய கூறியுள்ளது. இதனால் மன விரக்தி அடைந்த நவமணி, செந்தில்குமாரிடம் சென்று பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அதற்கு பணம் தர முடியாது என்று செந்தில்குமார் மிரட்டி உள்ளார்.

இதுகுறித்து, தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் நவமணி புகார் அளித்தார். செந்தில்குமாரிடம் விசாரணை நடத்தியபோது பணம் வாங்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். பின்னர், உரிய விசாரணை நடத்த மகளிர் ஆணையம் வண்ணாரப்பேட்டை துணை ஆணையருக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தண்டையார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தியபோது, செந்தில்குமார் ₹2.5 லட்சம் வாங்கியதாகவும், அதில் ஒரு லட்சத்தை கொடுப்பதாகவும் கூறினார். அதனை ஏற்றுக் கொள்ளாத நவமணி, மகளிர் ஆணையத்தில் முறையிடுகிறேன் என்று கூறிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் செந்தில்குமாரின் வீட்டிற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்று பணத்தை திருப்பி கேட்டபோது தகாத வார்த்தையில் பேசியதால் மனம் உடைந்த நவமணி கொசு மருந்தை குடித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், என்னுடைய சாவிற்கு பாஜ நிர்வாகி செந்தில்குமார்தான் காரணம் என்று 2 பக்கத்திற்கு நவமணி எழுதி வைத்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். இந்நிலையில் வண்ணாரப்பேட்டை துணை ஆணையரின் தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை 3 மணியளவில் செந்தில்குமாரை கைது செய்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் விசாரணை நடத்தி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜ மாவட்ட தலைவர் நடத்தும் மெடிக்கல் ஷாப்பில் காலாவதி, போதை மருந்துகள் விற்பனை: நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன்
சென்னை, ஜூலை 4: தென் சென்னை மாவட்ட பாஜ தலைவராக உள்ள காளிதாஸ் நடத்தும் மெடிக்கல் ஷாப்பில் காலாவதியான மருந்துகள் மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டதால் அவர் மீதும், மனைவி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் அவர் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தென் சென்னை பாஜ மாவட்ட தலைவராக இருப்பவர் காளிதாஸ். இவர் மேற்கு சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் மருந்துக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். ஒன்றிய மோடி அரசின் மலிவு விலை மருந்து திட்டத்தின் கீழ் மக்கள் மருந்தகம் எனும் மருந்துக் கடையை தனது மனைவியுடன் இணைந்து நடத்தி வருகிறார். பிரதமர் மோடியின் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டு வரும் இந்த மருந்துக் கடையில் தரமற்ற மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக தமிழக அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு பல புகார்கள் செய்யப்பட்டன.

இதையடுத்து, புகாரின் மீது சென்னை மண்டலம் 3ல் இயங்கும் மருந்து கட்டுப்பாட்டுத்துறையின் உதவி இயக்குநர் அலுவலகம் நடத்திய விசாரணையில், அந்த மருந்துக்கடையில் காலாவதியான மருந்துகள் இருப்பதும், போதை மாத்திரைகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, காளிதாஸ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது சென்னை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில், நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை அன்று ஆஜராக காளிதாசுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

The post பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: