ஸ்டாக் மார்க்கெட்டில் அதிக லாபம் என ஆசைகாட்டி 15 முதலீட்டாளர்களிடம் ₹29.06 கோடி மோசடி: ஒருவர் கைது

ஆவடி, ஜூலை 4: ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி 15 முதலீட்டாளர்களிடம் ₹29.06 கோடி மோசடி செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கொரட்டூரில் உள்ள வாட்டர் கெனால் சாலையில் வசிப்பவர் அஸ்வத் (32). இவர் எஸ்.பி.கே. எக்ஸ்போர்ட் என்ற பெயரில் வேர்க்கடலை ஏற்றுமதி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 4ம் தேதி, இவரது இன்ஸ்டாகிராமில் ‘ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்ட்’ என்ற பெயரில் விளம்பரம் ஒன்று வந்துள்ளது.

அதில் ‘ஸ்டாக் மார்க்கெட்டில்’ முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என அஸ்வத்திடம் மர்ம நபர்கள், ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதேபோன்று அனுப்பப்பட்ட நபர்களுக்கு எல்லோருக்கும் முதலீடு குறித்தும், அதன் லாபம் குறித்தும் பேசியுள்ளனர். அதன்படி, இன்ஸ்டாகிராம் விளம்பரம் மற்றும் மர்ம நபர்கள் வாட்ஸ் அப் சாட்களை நம்பி, மர்ம நபர்கள் கொடுத்த பல வங்கி கணக்குகளில் அஸ்வத் உள்ளிட்ட 15 பேர் ₹29.06 கோடி முதலீடு செய்துள்ளனர். இதை தொடர்ந்து, முதலீடு செய்தவர்களுக்கு வர வேண்டிய கமிஷன் மற்றும் முதலீடு தொகையை திரும்ப எடுக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அஸ்வத் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து மார்ச் மாதம் ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து விசாரித்து வந்த ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீசார், மோசடிக்காரர்கள் பயன்படுத்திய வங்கி கணக்கை கொண்டு நடத்திய விசாரணையில், சென்னை, திருவல்லிக்கேணியை சேர்ந்த முகமது இப்ராஹிம்(34) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் நடத்திய விசாரணையில், முகமது இப்ராஹிம் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த பலரை ஏமாற்றி, பல கோடி ரூபாய் சுருட்டியது தெரிய வந்தது. போலீசார், அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post ஸ்டாக் மார்க்கெட்டில் அதிக லாபம் என ஆசைகாட்டி 15 முதலீட்டாளர்களிடம் ₹29.06 கோடி மோசடி: ஒருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: