ஜூலை 5ம் தேதி கடைசி குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு

திருவாரூர், ஜூலை 2: திருவாரூர் மாவட்ட சுகாதாரதுறை சார்பில் நேற்று கொடிக்கால்பாளையம் குழந்தைகள் மையத்தில் நடைபெற்ற வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் மற்றும் வைட்டமின்- ஏ திரவம் வழங்கும் முகாமை கலெக்டர் சாரு துவக்கி வைத்தார்.

திருவாரூர் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் மற்றும் வைட்டமின்- ஏ திரவம் வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கொடிக்கால்பாளையம் குழந்தைகள் மையத்தில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு நேற்று துவக்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், கலெக்டர் சாரு பேசியதாவது: தமிழக முதல்வரின் உத்தரவின்படி இந்த வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் இன்றைய தினம் (நேற்று) முதல் வருகிற ஆகஸ்ட் 31ம் தேதி வரையிலும், இதேபோல் வைட்டமின்- ஏ திரவம் வழங்கும் முகாம் இன்றைய தினம் முதல் வரும் 31ந் தேதி வரை (புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) நடைபெறவுள்ளது. அதன்படி மாவட்டத்தில் வயிற்றுப்போக்கு தடுப்பு முகாமிற்காக தமிழ்நாடு மருந்துவப் பணிகள் சேவை கழகம் மூலமாக 77 ஆயிரத்து 90 ஓ.ஆர்.எஸ் பொட்டலங்களும் மற்றும் 4 லட்சத்து 131 ஜிங்க் மாத்திரைகளும் பெறப்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 984 குழந்தைகளுக்கு வழங்கப்படவுள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கு வயிற்றுப்போக்கு முக்கிய காரணமாகும். வயிற்றுப்போக்கின் போது குழந்தைகளுக்கு துத்தநாக மாத்திரைகள் (ஜிங்க்) மற்றும் போதுமான ஊட்டச்சத்தை உட்கொள்வதினால் வயிற்றுப்போக்கால் ஏற்படும் நீரிழப்பை தடுப்பதன் மூலம் இறப்புகளை தவிர்க்கலாம்.

மேலும் அங்கன்வாடி பணியாளர்களால் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு 2 ஒஆர்எஸ் பொட்டலங்கள் மற்றும் 14 ஜிங்க் மாத்திரைகள் விநியோகிக்கப்படும். அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் ஒஆர்எஸ் கரைசல் தயாரிப்பு தொடர்பான செயல் விளக்கத்தினை பொது மக்களுக்கு நடத்திட வேண்டும். மேலும், வைட்டமின் ஏ குறைபாட்டினால் பார்வைகுறைபாடு, தீவிர சுவாச தொற்று மற்றும் பள்ளி முன்பருவ குழந்தைகளிடையே நோய்வாய்ப்பட்டு குழந்தைகள் இறப்பதை தவிர்க்கும் பொருட்டு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படுகிறது. இந்த வைட்டமின் ஏ திரவம் 6 மாதம் முதல் 60 மாதம் வரையிலான சுமார் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 488 குழந்தைகளுக்கு வழங்குவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வைட்டமின் ஏ திரவம் 6 மாதம் முதல் 11 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு 1 மி.லி. அளவும் மற்றும் 12 மாதம் முதல் 60 மாதம் வரை குழந்தைகளுக்கு 2 மி.லி. அளவும் முகாம்களில் வழங்கப்படும்.

எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு தவறாமல் வைட்டமின் ஏ திரவம் கிடைப்பதை உறுதி செய்து மேற்கண்ட நோய்கள் வராமல் தடுப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவி த்துள்ளார். அதனைத்தொடர்ந்து, தாஜ்மன்ஜில் நகராட்சி துவக்கப்பள்ளியில் நடைபெற்று வரும் முகாமை கலெக்டர் சாரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ஹேமசந்த் காந்தி, ஆர்டிஓ சங்கீதா, நகராட்சி தலைவர் புவனப்பிரியா செந்தில், பணி நியமனக்குழு உறுப்பினர் பிரகாஷ், கமிஷனர் பிரபாகரன், தாசில்தார் செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post ஜூலை 5ம் தேதி கடைசி குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: