கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணி

வீரவநல்லூர்,ஜூலை 2: சேரன்மகாதேவி சப்-கலெக்டர் ஆபிஸ் எதிரில் ரயில்வே பீடர் ரோடு உள்ளது. இந்த ரோட்டில், மாவட்ட கூட்டுறவு பதிவாளர் அலுவலகம், மின்வாரிய அலுவலகம், எல்ஐசி அலுவலகம், போஸ்ட் ஆபிஸ் மற்றும் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. சேரன்மகாதேவி பஸ்-ஸ்டான்டிலிருந்து ரயில்வே ஸ்டேசனுக்கு செல்லும் பிரதான சாலையாக திகழும் இவ்வழியாக தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இப்பகுதியில் இருந்த தார் சாலை மிகவும் மோசமாக இருந்ததால் புதிதாக பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கு நிதி ஓதுக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பணிகள் துவங்கியது. இதற்காக போஸ்ட் ஆபிஸ் அருகில் கழிவுநீர் செல்ல ஏதுவாக சிறிய பாலம் கட்டப்பட்டது. தொடர்ந்து ரோட்டின் ஆரம்பத்திலிருந்து போஸ்ட் ஆபிஸ் வரை சுமார் 150 மீட்டர் தூரம் பழைய சாலையானது பொக்லைன் இயந்திரம் மூலம் பெயர்க்கப்பட்டது. பழைய சாலை பெயர்க்கப்பட்டு 3 மாதங்களாகியும் இதுவரை புதிய சாலை அமைக்கப்படாததால் குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை கடக்க பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவிகள் பலர் இச்சாலையில் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் நலன் கருதி கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

The post கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணி appeared first on Dinakaran.

Related Stories: