ரூ.718 கோடி முதலீடு; ஷ்னைடர் எலக்ட்ரிக் குழுமத்தின் புதிய ஆலை ஓசூரில் அமைகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: ஷ்னைடர் எலக்ட்ரிக் குழுமம் ரூ.718 கோடியில் விரிவாக்கம் மற்றும் புதிய ஆலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்கும், தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை செய்து வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து அனைவரையும் உள்ளடக்கிய சீரான மற்றும் பரவலான வளர்ச்சி என்பதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் உலகத் தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி, அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி மேம்பட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், சென்னை மற்றும் கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஷ்னைடர் நிறுவனத்தின் ஆலைகளின் விரிவாக்கம், ஓசூரில் ஷ்னைடர் எலக்ட்ரிக் ஐடி பிசினஸ் நிறுவனத்தின் மின்கலன்கள் மற்றும் குளிர்விப்பு தீர்வுகளுக்கான புதிய ஆலை அமைக்கும் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் செய்யப்பட்டது. இதற்காக, ரூ.718 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் 663 பேருக்கு வேலை கிடைக்கும். ஷ்னைடர் எலக்ட்ரிக் குழுமம், மின்சாரம் மற்றும் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மற்றும் மின் மேலாண்மை தீர்வுகள் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது. சுமார் 30 வருடங்களாக, தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் அருண் ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தாரேஸ் அகமது கலந்து கொண்டனர்.

Related Stories: